துப்புரவு ஆய்வாளர்கள் மனு : அரசியல்வாதிங்க மிரட்டுறாங்க
சென்னை, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனை சந்தித்து, துப்புரவு ஆய்வாளர்கள் சங்கத்தினர், நேற்று அளித்த கோரிக்கை மனு:
‘எங்களுக்கு வழங்கப்பட்ட, ‘பிஜ்லி பே’ இயந்திரம் வாயிலாக, அபராதம் வசூல் செய்யும்போது, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம். தினமும், 5,000 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
அபராதம் வசூலிக்கும்போது, அரசியல்வாதிகள் எங்களை மிரட்டுகின்றனர். உயர் அதிகாரிகளிடம் கூறினால், ‘அங்கே அபராதம் விதிக்காதே; இல்லையேல் உன்னை இடம் மாற்றிவிடுவேன்’ என்கிறார்.
விதிமீறும் வணிகர்களிடம் அபராதம் வசூலிக்க சென்றால், ‘என்னிடம் கூகுள் பே இல்லை. என்னால் பணம் கட்ட முடியாது; முடிந்ததை பார்த்துக் கொள்’ என்கின்றனர். எங்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அத்தகையோர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை. அதற்கான உரிமை வேண்டும்.
அரசியல், அதிகாரம், பணம் படைத்தவர்களால் எங்கள் பணியிடமாற்ற தண்டனை வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். முடியாது என்றால் அபராதம் வசூலிப்பதில் இருந்து, எங்களை விளக்குங்கள். கருணை உள்ளத்தோடு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.