ராமச்சந்திராவில் பட்டமளிப்பு 74 மாணவர்களுக்கு தங்க பதக்கம்
சென்னை,சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், 38வது பட்டமளிப்பு விழா, கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது.
மருத்துவம், பொறியியல், மேலாண்மை துறைகளில் ஆராய்ச்சி முனைவர் படிப்புகள், இளநிலை, முதுநிலை படிப்புகளை நிறைவு செய்த, 1,680 மாணவர்களுக்கு பட்டங்கள் அளிக்கப்பட்டன. இதில், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு, 74 தங்க பதக்கங்கள் மேடையில் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் சஞ்சய் பிஹாரி பேசியதாவது:
மாணவர்கள் தொடர் பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
புத்தாக்க நடவடிக்கைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, இளம் தலைமுறையினர் அதீத பங்களிப்பை வழங்குவது அவசியம்.
மன உளைச்சலிலும், கவலையிலும், கோபத்திலும் இருக்கும்போது, தெளிவான சிந்தனை எழாது.
சரியான முடிவுகளை எடுக்க முயற்சியும், பயிற்சியும், கட்டுக்கோப்பான மனநிலையும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ராமச்சந்திரா கல்வி நிறுவன வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், இணை வேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன், துணை இணை வேந்தர் மகேஷ் வக்கமுடி, துணை வேந்தர் உமா சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.