ஜி.எஸ்.டி. , சாலை ஒவ்வொரு மழைக்கும் தத்தளிக்கும்
மழைக்காலத்தில், ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், ஜி.எஸ்.டி., – ரயில்வே லைனை கடந்து, சிட்லப்பாக்கம், நெமிலிச்சேரி, பல்லாவரம் ஏரிகளுக்கு செல்லும் வகையில், சானடோரியம் ஆஞ்சநேயர் கோவில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், வெற்றி தியேட்டர், பான்ட்ஸ் சிக்னல் ஆகிய இடங்களில், சாலை மற்றும் தண்டவாளத்தின் கீழ், கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கால்வாய்களை, நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையினர் முறையாக பராமரிக்கவில்லை. இப்பகுதிகளில் குடியிருப்புகளின் பெருக்கம் மற்றும் அதிக மழை பொழிவால், கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது.
மழைநீரின் அளவுக்கு ஏற்ப கால்வாய்கள் இல்லாததால், தண்ணீர் பின்நோக்கி வந்து, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் குடியிருப்புகளை சூழ ஆரம்பித்தது.
கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், இக்கால்வாய்களை துார்வாரி, ஆழப்படுத்தி அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள கால்வாய்களை நெடுஞ்சாலைத் துறையினர் துார்வாரினர். ஆனால், தண்டவாளத்தின் கீழ் செல்லும் கால்வாய்களை, ரயில்வே துறையினர் துார்வாரவில்லை. அப்படியிருந்தும் வெள்ளம் தேங்குவது தொடர்ந்தது.
இதையடுத்து, வெற்றி தியேட்டர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகே செல்லும் கால்வாயை, நெடுஞ்சாலைத் துறையினர் அகலப்படுத்தினர். பான்ட்ஸ் சிக்னல் அருகேயுள்ள கால்வாயை துார்வாரி, ஆழப்படுத்தினர்
மேலும், கால்வாய்களை அகலப்படுத்தும் பணிக்காக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரயில்வே துறைக்கு, 2.91 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், ரயில்வே அதிகாரிகள், இப்பிரச்னையை கருத்தில் கொள்ளாமல் இருப்பதால், ஒவ்வொரு மழையின் போதும், வெற்றி தியேட்டர், பான்ட்ஸ் சிக்னல் அருகே, ஜி.எஸ்.டி., சாலையின் வெள்ளம் தேங்கி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு, நெரிசல் ஏற்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.