சுற்றுச்சூழல் பூங்கா ரூ.6.24 கோடியில்
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையில், 6.24 கோடி ரூபாய் மதிப்பில், நவீன சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல் உட்பட, 73 தீர்மானங்கள், மண்டல கூட்டத்தில் நிறைவேறின.சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டல கூட்டம், நேற்று முன்தினம், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடந்தது.
மண்டல உதவி கமிஷனர் சரவணமூர்த்தி, செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, ஹரிநாத் மற்றும் குடிநீர், மின்வாரியம் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, 73 தீர்மானங்கள், அடிப்படை பிரச்னைகள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்.
அதன்படி, 38 வது வார்டு, எண்ணுார் நெடுஞ்சாலையில், ரயில்வே இடத்தில், 2.55 கோடி ரூபாய் செலவில் குளம்; கருணாநிதி நகர், 3 வது தெருவில், 91 லட்ச ரூபாய் செலவில், சமுதாய கூடம் அமைக்க முடிவானது.
வார்டு, 45 ல், மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில், இரண்டு கோடி ரூபாயில் புதிய வார்டு அலுவலகம்; வார்டு, 47, கெனால் தெருவில் – பாரதி நகர் அருகே, 6.24 கோடி ரூபாயில் நவீன சுற்றுச்சூழல் பூங்கா; 49 வது வார்டில், சென்னை நடுநிலைப்பள்ளிக்கு, 4.96 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி உட்பட, 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன