போலீசில் ஒப்படைத்த மகன் நகை பறித்த தந்தையை
தாம்பரம்,திருச்சி, குண்டூரைச் சேர்ந்தவர் வசந்தா மாரிக்கண்ணு, 80; ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், ஹைதராபாதில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்தார். மீனம்பாக்கம் வந்தவர், திருச்சி செல்ல தாம்பரம் நோக்கி ஆட்டோவில் பயணித்தார்.
குரோம்பேட்டை, டி.என்.எச்.பி., காலனி சாலை வழியே பச்சைமலை அருகே, நேற்று காலை 10:00 மணியளவில் ஆட்டோ சென்றபோது, வசந்தாவை மிரட்டி 10 சவரன் நகையை ஓட்டுநர் பறித்தார். பின், ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்றார்.
இது குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதனிடையே 10 சவரன் நகையை பறித்த ஆட்டோ ஓட்டுனர், வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடம் நகை பறித்து வந்த விஷயத்தை கூறி, ‘இதை அடகு வைத்து, நம் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனக் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் ராமச்சந்திரன், உடனடியாக தந்தையை பிடித்து, தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர், கஸ்துாரிபாய் நகர் சாமியார் தோட்டத்தைச் சேர்ந்த கணேசன், 50, என்பது தெரியவந்தது.
தந்தையே ஆனாலும் திருடியவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ராமச்சந்திரனை போலீசார் பாராட்டினர். கணேசனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.