சாலை கிராம சபையில் உறுதி : எண்ணுார் சுனாமி நகருக்கு விசாலமான இணை
எண்ணுார், திருவொற்றியூர் மண்டலம், 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில், அம்பேத்கர் நகர், தனியார் மண்டபத்தில், 10வது கிராம சபை கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், வார்டு பொறியாளர் துரைபாபு, வார்டுக்குட்பட்ட, 33 நகர்களின் நிர்வாகிகள் பங்கேற்று, தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
அவற்றில் சில கோரிக்கைகள்:
கொசு மருந்து பகலில் அடித்தால் பலனில்லை. இரவு நேரங்களில் அடிக்க வேண்டும். மழைநீர் வடிகால்களை துார்வார ஊழியர்களிடம் போதிய உபகரணங்கள் கிடையாது. அஞ்சுகம் நகர், பாரதியார் நகரில், குப்பை வண்டி வாரத்திற்கு இரு தினங்கள் மட்டுமே வருகின்றன.
நெய்தல் நகரில் தெருவிளக்குகள் போதிய வெளிச்சமின்றி உள்ளன. மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும். ஜூவன்லால் நகரில், மின்பெட்டிகள் உயர்த்தி அமைக்கப்பட வேண்டும்.
பின், கவுன்சிலர் சொக்கலிங்கம் பதிலளித்து பேசியதாவது:
குப்பை வண்டி, தினசரி வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகளுக்கு, ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆயுட் காலம். ஆனால், இங்கு 13 ஆண்டுகள் கடந்த கம்பங்கள் கூட உள்ளன. துரு ஏறி, மஞ்சள் பிடித்துள்ளன.
இங்கு மட்டுமின்றி, மாநகராட்சியின், கடற்கரை ஒட்டிய பகுதிகளில், கடல் காற்றால் விரைவில் துருபிடிக்கும் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என, மன்றத்திலேயே கோரிக்கை விடுத்துள்ளேன். நிச்சயம் மாற்றப்படும்.
‘குட்டி மும்பை’ போல் செயல்படும் சுனாமி நகருக்குள் செல்லும், பாரதியார் நகர் மற்றும் நேதாஜி நகர் இணைப்பு சாலைகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.