33 கோடியில் ஒப்பந்தம்: சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக மேம்பாட்டு கட்டுமானத்திற்கு நிர்வாகம் தகவல்
சென்னை, டிச.12: சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு ரூ.33 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம், தனது நிலச் சொத்துகளின் முழுமையான பயன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களுக்காக எடுக்கப்பட்ட இடங்களில் வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களைக் கண்டறிந்து பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியில் சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே வணிக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டத்தில் அமைந்துள்ள சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த வணிக மேம்பாட்டிற்கான கட்டுமான ஒப்பந்தம் பிபி டெவலப்பர்ஸ் ஆண்டி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் அந்நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் மற்றும் பிபி டெவலப்பர்ஸ் ஆண்டி பில்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாபி பெனடிக்ட் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.