162 பயணிகள் தவிப்பு : சிங்கப்பூர் விமானத்தில் திடீர் கோளாறு
மீனம்பாக்கம், டிச. 12: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு காலை 10.40 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் வரும். அதே விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு பகல் 12 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்ல 162 பயணிகள் தயாராக இருந்தனர்.ஆனால் அவர்களிடம் திடீரென விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தில் உள்ள வால்வு ஒன்று பழுதடைந்து இருந்ததை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானத்தை இயக்குவது ஆபத்து என்று கருதி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த வால்வை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனால் விமானம் தாமதமாக சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 162 பயணிகளும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்து தவித்தனர். பின்னர், சிங்கப்பூர் ஏர் இந்தியா பயணிகள் விமானம் 7 மணி நேரம் தாமதமாக நேற்று இரவு 7.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.