வாகன ஓட்டிகளுக்கு அபிஷேகம் ‘ஷவர்’ சுரங்கப்பாதையில் கழிவுநீர்
வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பகுதியில் மாநகராட்சி பராமரிப்பில் சுரங்கப்பாலம் உள்ளது. இதில், வில்லிவாக்கத்தில் இருந்து, ராஜமங்கலம், கொளத்துார் செல்லும் பாதையும், ராஜமங்கலத்தில் இருந்து வில்லிவாக்கம் செல்லும் இரு பாதைகள் உள்ளன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுரங்க பாலத்தில், மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது வழக்கம்.
அதேபோல, சுரங்கபாலத்தின் நடுவே, ஆண்டு முழுதும் கழிவுநீர் வடியும் பிரச்னைக்கும் தீர்வு கிடைப்பதில்லை.
இது குறித்து, சிட்கோ நகரைச் சேர்ந்த குப்பன் கூறியதாவது:
வில்லிவாக்கம் சுரங்கப்பாலம் வழியாக தான், பல ஆண்டுகளாக பணிக்கு செல்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே பாலத்தில் போதிய பராமரிப்பு கிடையாது. பாலத்தின் இருபாதையிலும் கழிவுநீர் வடிந்து, சாலையில் துர்நாற்றம் வீசுகிறது.
குறிப்பாக, பாலத்தின் நடுவே, காலையும், மாலையும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், ‘ஷவர்’ போல் வடியும் துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வடிகிறது. இதனால், அவ்வழியாக ‘டிப் டாப்’ உடையுடன் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபிஷேகம் நடக்கிறது.
வழியும் கழிவுநீரானது எங்கிருந்து வருகிறது என்பதை முறையாக கண்டறிய முடியவில்லை. வில்லிவாக்கம் ரயில்நிலையம் அல்லது அப்பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளில் சட்டவிரோத இணைப்பா என சந்தோம் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.