ரூ.7.50 கோடியை வாடிக்கையாளரின் சுருட்டிய வங்கி ஊழியர்கள் கைது
சென்னை, வங்கி வாடிக்கையாளரின், 7.50 கோடி பணத்தை கையாடல் செய்த, ‘எஸ்’ வங்கி முன்னாள் ஊழியர்கள் இருவரை, மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
தேனாம்பேட்டை, ரத்னா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மெய்யப்பன், 70. லண்டனில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:
கடந்த, 2018ம் ஆண்டில், ‘எஸ்’ வங்கி அடையாறு கிளையில் கணக்கு துவங்கினேன். அக்கிளை மேலாளர் பேட்ரிக் ஹாப்மேன் என்பவர், 2021ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
பின் நானும், என் மனைவியும் சீனியர் சிட்டிசன் என்பதால், பணத்தை டிபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறியதால், இரண்டு கணக்குகள் துவங்கி அவற்றில், 7.50 கோடி ரூபாய் டிபாசிட் செய்தேன். பின் லண்டன் சென்றுவிட்டேன்.
தான் வெளிநாட்டில் இருந்த சமயத்தில், பேட்ரிக் ஹாப்மேன் என்பவர், என் வங்கி கணக்கு கொண்ட காசோலை புத்தகத்தை பெற்று, போலியாக கையொப்பமிட்டு தங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி, மோசடி செய்துள்ளார். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு கொடுங்கள்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான பேட்ரிக் ஹாப்மேன், லண்டன் தப்பியது தெரியவந்தது.
மேலும், மோசடிக்கு உடந்தையாக, வங்கியின் முன்னாள் ஊழியர்கள் கார்த்திக், 32, செந்தில்குமார், 41 ஆகிய இருவரும் செயல்பட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடைய ராபர்ட் என்பவரை, கடந்த மே, 17ல் போலீசார் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை, உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.