‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,’ சென்னையில் 14ம் தேதி நிகழ்ச்சி நடக்கிறது
சென்னை: ‘தினமலர்’ நாளிதழ், வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் நிறுவனம் இணைந்து வழங்கும், ‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,’ என்ற நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10:00 முதல் பகல், 1:00 மணி வரை நடைபெற உள்ளது.
யு.பி.எஸ்.சி., என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீஸ் தேர்வு வாயிலாகவே, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., – ஐ.ஆர்.எஸ்., உட்பட பல்வேறு உயரிய அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதேபோல, டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ‘குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ’ போன்ற பல்வேறு தேர்வு களின் வாயிலாக, மாநில அரசு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இத்தகைய தேர்வுகள் குறித்தும், தேர்வுகளை திறம்பட அணுகும் விதம் குறித்தும், மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தினமலர்’ நாளிதழ், வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் இணைந்து, ‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்நிகழ்ச்சியில், யு.பி.எஸ்.சி., தேர்வு முறைகள், தேர்வுகளில் சாதிக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பிரிலிமினெரி, மெயின்ஸ் மற்றும் இன்டர்வியூ ஆகியவற்றில் திறம்பட செயல்படும் விதம் போன்றவை குறித்து, பிரபல ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவீந்திரன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை ஆகியோர், நேரடியாக விளக்கம் அளிக்கின்றனர்.
மேலும், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற என்ன படிக்க வேண்டும்; எப்படி படிக்க வேண்டும்; எப்போது படிக்க வேண்டும்; எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்; விருப்ப பாடத்தை தேர்வு செய்வது எப்படி என்பது உட்பட, அனைத்து சந்தேகங்களுக்கும் ஆலோசனை வழங்குகின்றனர். சென்னையை தொடர்ந்து வரும் 15ம் தேதி, மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கிலும், வரும் 21ம் தேதி, கோவை எஸ்.என்.ஆர்., ஆடிட்டோரியத்திலும், ‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,’ நிகழ்ச்சி நடக்கிறது
இலவச வழிகாட்டி புத்தகம்
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர், 95667 77833 என்ற, ‘வாட்ஸாப்’ எண்ணிற்கு IAS என, ‘டைப்’ செய்து அனுப்பி, இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். நிகழ்ச்சியில் முன்பதிவு செய்து பங்குபெறும் அனைவருக்கும், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.