அமைச்சர் கையில் தான் இருக்கிறது நான் எம்எல்ஏவாக தொடர்வது: செல்வப் பெருந்தகை பேச்சு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில், ‘‘கடந்த வாரம் பெய்த மழையால் வரதராஜபுரம் பகுதியில் முல்லை நகர், தனலட்சுமி நகர், பிடிசி நகர், அஷ்டலட்சுமி நகர் போன்ற இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது. நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுபவம் வாய்ந்தவர், எதையெடுத்தாலும் முழுமையாக செய்யக்கூடியவர். அரைகுறையாக செய்யாதவர். அதை நாடு அறியும்.

ஆனால், அந்தப் பகுதியில் என்னுடைய தொகுதியான வரதராஜபுரம் பகுதியில் அரைகுறையாக வேலை நடந்திருக்கிறது. முழுமையாக வேலை நடைபெறவில்லை. ஆனால், முன்பு ஒரு காலத்தில் எல்லாம் மழை, வெள்ளம் வந்தால் பத்து நாட்கள், இருபது நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கும். உங்களுடைய முயற்சியால் இப்போது ஒரு நாளில் வடிந்து விடுகிறது. இருந்தபோதிலும் நான் குறிப்பிட்ட அந்த பகுதிகளில் திருப்புகழ் கமிட்டியுடைய பரிந்துரை இருக்கிறது.

அவரின் பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றினால் தான் அங்கே தண்ணீர் இல்லாத பகுதியாக அந்த பகுதியைப் பார்க்க முடியும். ஆகவே, திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை அமைச்சர், முதல்வரின் வழிகாட்டுதலோடு நிறைவேற்றுவார் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். எல்லா இடத்திலும் இருப்பதுபோல நெருக்கடி எனக்கும் என்னுடைய தொகுதியில் இருக்கிறது. ஒரு உத்தரவாதம் கொடுத்திருக்கிறேன். வருகின்ற நிதிநிலை அறிக்கையில் எங்களுடைய நீர்வளத் துறை அமைச்சர் திருப்புகழ் கமிட்டியை நிறைவேற்றவில்லையென்று சொன்னால், நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது அவர் கையில்தான் இருக்கிறது.

நீர்வளத் துறை அமைச்சர் இதை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘உறுப்பினர் நன்றாக என்னிடம் மாட்டிக்கொண்டார். அவர் அடுத்தமுறை சட்டமன்ற உறுப்பினராக வருவது என் கையில்தான் இருக்கிறது. திருப்புகழ் கமிட்டி மட்டுமல்ல. திருவாசகம் கமிட்டி கொடுத்தாலும் சரி. நீங்கள் கூறியது எனக்கு தெரியும். அதற்காக முந்தைய நாள்கூட அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம். குறை தீர்க்கப்படும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *