குன்றத்துார் சார் – பதிவாளர் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பத்திய சஸ்பெண்ட்’
சென்னை:விற்பனை சான்றிதழை பதிவு செய்வதில், 11 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில், குன்றத்துார் சார் – பதிவாளர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
தென் சென்னை பதிவு மாவட்டத்தில், குன்றத்துார் சார் – பதிவாளர் அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகின்றன. இங்கு பணிபுரிய சார் – பதிவாளர்கள் மத்தியில் கடும் போட்டி உள்ளது.
குன்றத்துார் சார் – பதிவாளர் அலுவலகத்தில், தினேஷ் என்பவர் சார் – பதிவாளராக பணிபுரிந்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், இடமாற்றத்தில் வந்தவர்.
இந்நிலையில் டி.ஆர்.டி., எனப்படும் கடன் வசூல் தீர்ப்பாயத்தில், ஒரு குறிப்பிட்ட சொத்து ஏலம் விடப்பட்டுள்ளது. அதை ஏலம் எடுத்தவருக்கு, தீர்ப்பாயம் சார்பில் விற்பனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை சான்றிதழை, சம்பந்தப்பட்ட சார் – பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்து, பதிவு செய்ய வேண்டும்.
இதன்படி வந்த ஒரு பத்திரத்தை, அதில் குறிப்பிட்ட மதிப்பின் அடிப்படையில், முத்திரை தீர்வை, கட்டணங்கள் வசூலித்து குன்றத்துார் சார் – பதிவாளர் தினேஷ், பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அந்த பத்திரத்தில் சம்பந்தப்பட்ட சொத்தில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளதால், அதற்கு கூட்டு மதிப்பு என்ன என்பதை பார்த்து, அதன் அடிப்படையில் முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.
ஆனால், இந்த பத்திரத்தில் சார் – பதிவாளர் கூட்டு மதிப்பை கவனிக்கவில்லை என்றும் இதனால், 11 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சார் – பதிவாளர் தினேஷை, தற்காலிக பணி நீக்கம் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இழப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.