ரூ.68.75 லட்சம் இழப்பீடு: கார் மோதி ஊழியர் இறப்பு

சென்னை,:சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 37. தனியார் நிறுவன ஊழியரான இவர், 2021 மார்ச்., 15ல், மதுரவாயல் புறவழிச்சாலையில், தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

புலிக்கொரடு பகுதி அருகே, இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில், படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில், கணவரின் இறப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், மனைவி நிதா, மகன் யுகேஷ் மற்றும் மகன் கனிஷ்கா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கார் உரிமையாளர் தரப்பில், ‘மனுதாரரின் கணவரின் கவனக்குறைவால் விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த போது, மனுதாரரின் கணவர் தலைகவசம் அணியவில்லை’ என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

காரின் ஓட்டுனர், இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் இடித்துள்ளார். இதில் மனோஜ்குமார் கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளார். போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்று ஆவணங்களை பார்க்கும்போது, அதிவேகம், அஜாக்கிரதையாக காரை, அதன் ஓட்டுனர் இயக்கியதே, விபத்துக்கு காரணம்.

எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 68.75 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனிவர்செல் சாம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *