ஒரு மாதமாக தேங்கும் கழிவுநீர் வடிகால் ஆற்காடு சாலையில் சேதமடைந்ததால் அவலம்
சாலிகிராமம்,:போரூர் மற்றும் கோடம்பாக்கத்தை இணைக்கும் பிரதான சாலையாக, ஆற்காடு சாலை உள்ளது. இச்சாலையில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடக்கின்றன.
இதில், வடபழனி — விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், 129வது வார்டு, சாலிகிராமம் பரணி ஸ்டூடியோ முதல் 80 அடி சாலை சந்திப்பு வரை, மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாத காலமாக, மழைநீருடன் கழிவுநீர் கலந்து, சாலையில் தேங்கி நிற்கிறது.
இப்பகுதியில் தேங்கும் மழைநீர், சாலிகிராமம் 80 அடி சாலை சந்திப்பில் இருந்து, பரணி ஸ்டூடியோ ஆற்காடு சாலை வழியாக அருணாச்சலம் சாலை சென்று, அங்கிருந்து விருகம்பாக்கம் கால்வாயில் வெளியேற வேண்டும்.
ஆனால், வடிகால் துார்ந்து போயுள்ளதால், சாலையில் மழைநீர் தேங்குகிறது. மேலும், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக வெளியேற்றப்படும் மழைநீரும், இந்த வடிகாலில் விடப்படுகிறது.
இதன் காரணமாக, சாலையின் அகலத்தில் 40 சதவீதம் அளவிற்கு கழிவுநீர் கலந்த தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது; போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள்கூறுகையில், ‘மெட்ரோ ரயில் பணியால் மழைநீர் வடிகால் சேதமடைந்துள்ளது. மின் மோட்டார் வாயிலாக மழைநீரை அகற்றி வருகிறோம். மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், விரைவில் மழைநீர் வடிகால் அமைக்க உள்ளது’ என்றனர்.