பஸ் நிலைய வணிக வளாக பராமரிப்பு படுமோசம்
செங்குன்றம்:செங்குன்றம் பேருந்து நிலைய வணிக வளாகம், கடந்த 2001ல் அப்போதைய வடசென்னை தொகுதி எம்.பி., மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.
இதில் கீழ் தளத்தில், 10, மேல் தளத்தில், 14, கடைகள் என, 24 கடைகளும், தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் உள்ளன.
தற்போது இந்த வணிக வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல், ஆங்காங்கே ‘சீலிங்’ சிமென்ட் காரை அடிக்கடி பெயர்ந்து விழுந்தபடி உள்ளன.
இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள ‘மனோகரன் டிராவல் ஏஜன்சி’ கடையில், கடந்த 3ம் தேதி சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.
அந்த கடையில், ‘பால் சீலிங்’ போடப்பட்டிருந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து வணிக வளாகத்தை பராமரிக்கும் நாரவாரிகுப்பம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆண்டுக்கு 43,000க்கு மேல் வாடகை தருகிறோம். ஆனால், பராமரிப்பிற்கு ஒரு ரூபாய்க்கு கூட பேரூராட்சி நிர்வாகம் செலவிடுவதில்லை. மொட்டை மாடியில் சிலர் அத்துமீறி தங்குகின்றனர்; கழிப்பறை படுமோசமாக உள்ளது. யாரும் அவர்களை தடுக்க முடிவதில்லை. உயிரிழப்பு அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தான், அதிகாரிகள் வருவரா என, தெரியவில்லை.
– வியாபாரிகள்