தென் சென்னையில் அச்சம்: தனியார் லாரிகளால் அதிகரிக்கும் விபத்து

நன்மங்கலம்: மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம், கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதியில் தனியார் தண்ணீர் லாரி, கழிவுநீர் லாரி மோதி, கடந்த மூன்று ஆண்டுகளில், 40க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. பலர் காயமடைந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நடப்பு ஆண்டு ஏப், 26, 30 மற்றும் மே 9ம் தேதி நடந்த விபத்துகளில் தலா ஒருவர் என, மூவர் பலியாகினர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி, பதிவு எண் பெறாத செங்கல் லாரி மோதி, தனபாக்கியம், 45, என்பவர் பலியானார்.

விபத்து பீதி

கடந்த மூன்று மாதங்களாக, மேடவாக்கம் — மடிப்பாக்கம் சாலை, வெள்ளக்கல் பகுதியில், 50க்கும் மேற்பட்ட செங்கல் லாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு உள்ளன.

இதனால், வாகன ஓட்டிகளிடையே விபத்து அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.எனவே, தண்ணீர் லாரிகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு தடை விதிக்கவும், கழிவுநீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவும், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள செங்கல் லாரிகளுக்கு தடை விதிக்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

முன்பு விவசாய பகுதியாக இருந்த நன்மங்கலம், கோவிலம்பாக்கம் மற்றும் கீழ்க்கட்டளை பகுதியில் வேளாண் தொழிலுக்காக தோண்டப்பட்ட கிணறுகளுக்கு, அரசின் சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.

நீர் விற்பனை

நகரமயமாக்கலில் இப்பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்றதால், முன்பு விவசாயம் செய்தவர்கள், விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் விற்பனைக்கு பயன்படுத்தி, கிணறுகளை மட்டும் மீதம் வைத்து, அவற்றின் வாயிலாக குடிநீர் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தவிர நன்மங்கலம், கோவிலம்பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்தும் நீர் உறிஞ்சப்பட்டு, லாரிகள் வாயிலாக பல இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு அதிக ‘ட்ரிப்’ அடித்தால், கூடுதல் சம்பளம் என்பதால், தண்ணீர் மற்றும் கழிவுநீர் லாரி ஓட்டுனர்கள், அசுர வேகத்தில் லாரிகளை இயக்குகின்றனர்.

கடந்த 2023, ஆக., 21ல், பள்ளி மாணவி லியோராஸ்ரீ, 10, தன் தாயுடன் ‘பைக்’ பின்னால் அமர்ந்து பள்ளிக்கு சென்ற போது, தண்ணீர் லாரி மோதி பலியானார்.

அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த வணிக ரீதியிலான தண்ணீர் கிணறுகளின் மின் தொடர்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், ஒரே வாரத்தில் அந்த கிணறுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டு, தற்போது வரை தண்ணீர் வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில், பள்ளி சென்று வரும் மாணவ- – மாணவியர் இந்த லாரிகளைக் கண்டு அஞ்சி நடுங்கி, சாலையோரம் ஒதுங்குவதுபெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடவடிக்கை தேவை

எனவே, தறிகெட்டு ஓடும் தனியார் தண்ணீர், மற்றும் கழிவுநீர் லாரிகளின் போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதோடு, முறைகேடாக இயங்கிவரும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டும்.

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் செங்கல் லாரிகளை வேறு இடங்களுக்கு மாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாலைகள் சின்னாபின்னம்

 

கடந்த 2023, நவ., 5ல், மேடவாக்கம் ஊராட்சி, வடக்குப்பட்டு பகுதி மக்கள், தனியார் தண்ணீர் லாரிகளை தடை செய்ய கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2023 அக்., 13ல் நடந்த பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில், தனியார் தண்ணீர் லாரிகளால் நகரின் உட்புற சாலைகள் சேதமடைவதாகவும், புதிய சாலைகள் இரண்டே மாதத்தில் சின்னாபின்னமாவதாகவும், கவுன்சிலர்கள் புகார் எழுப்பினர்.

கடந்த 2022 நவ., 4ம் தேதியன்று, கீழ்க்கட்டளை ஏரியில் நீர் உறிஞ்சிப் பிடித்த இரு டேங்கர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி ஓட்டுனர்கள் ஏழுமலை, 25, மற்றும் தினேஷ், 29, என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2023, அக்., 18ல், மனித கழிவுகளை பெரும்பாக்கம் ஏரியில் திறந்துவிட்ட மேடவாக்கம் தேவராஜ் என்பவருக்குச்சொந்தமான கழிவுநீர் லாரி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *