.அதிர்ச்சி!: ஆணைய பதிலால் வாகன ஓட்டிகள் கொதிப்பு ,பரனுார் சுங்கச்சாவடி இப்போதைக்கு மூடப்படாது

செங்கல்பட்டு:காலாவதி முடிந்து செயல்படும் செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடியை இழுத்து மூட வேண்டும் என, பல தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சுங்கச்சாவடி மற்றும் சாலைகளுக்கான செலவிட்ட, 1,000 கோடி ரூபாயில், 600 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி இருப்பதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மேலும் பல ஆண்டுகள், சுங்கச்சாவடியை இயக்க ஆணையம் திட்டமிடுவது, இந்த பதிலால் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுாரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. சென்னையின் நுழைவாயிலாக உள்ள இந்த சுங்கச்சாவடியை, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.

சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரியும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர் தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சொந்த ஊர் செல்லும்போது, சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

இந்த சுங்கச்சாவடி காலாவதி ஆகிவிட்டதாகவும், அதிக கட்டணம் வசூலித்து வாகன ஓட்டிகளை இம்சிப்பதாகவும் கூறி, கடந்த பிப்ரவரியில், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தினர். விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடியை இழுத்து மூட வேண்டும் என, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த போராட்டத்தின்போது, சங்கத்தினர் குறிப்பிட்டு பேசிய சில விஷயங்கள்:

சுங்கச்சாவடியில், 15 ஆண்டுகள் வரை மட்டுமே வாகன கட்டணம் வசூலிக்க முடியும். நகராட்சி எல்லையில் இருந்து, 10 கி.மீ., வரம்பிற்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது; 60 கி.மீ., இடையே ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடி இருக்கக் கூடாது. நிர்ணியக்கப்பட்ட தொகையை வசூல் செய்த பின், சாலை பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

இந்த விதிகளை எல்லாம், பரனுார் சுங்கச்சாவடி அப்பட்டமாக மீறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டே சுங்கச்சாவடியை மூடியிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகளை கடந்தும், கட்டண வசூல் நடக்கிறது.

மூன்று ஆண்டுகளில் விதிகளை மீறி, 28 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும், 62.33 லட்சம் வாகனங்கள் இலவசமாகச் சென்றதாக குறிப்பிட்டு, அதற்குரிய பணத்தையும் கையாடல் செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி, கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்போர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடியை இழுத்து மூட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கிடையில், காலாவதியான பரனுார் சுங்கச்சாவடியை மூடக்கோரி, மத்திய அரசிடம், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சுங்கச்சாவடி குறித்து, தாம்பரம், சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக, சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதற்கு, சாலை அமைக்க செலவழித்த மொத்த மூலதன செலவில், 19 ஆண்டுகளில், 57.6 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளதாக கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்த பதில்:

பரனுார் சுங்கச்சாவடி எல்லை இரும்புலியூரில் துவங்கி, மேலவலம்பேட்டை நெல்வாய் சந்திப்பு வரை, 46.5 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையை அமைக்க, மொத்த மூலதன கட்டுமான செலவு, 1,036.91 கோடி ரூபாய். 19 ஆண்டுகள், ஐந்து மாதங்களில், அதாவது

2005 ஏப்.,- – 2024 ஆக., வரை, 596.80 கோடி ரூபாய், சுங்க கட்டணமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது. இது மொத்த மூலதன செலவில், 57.6 சதவீதம். மீதமுள்ள 440.11 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.

இந்த சாலையை வடிவமைத்தபோது இருந்த போக்குவரத்தைவிட, 295 சதவீதம் அதிகமான வாகனங்கள் தற்போது சென்று வருகின்றன. இதனால், 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட வேண்டிய வாகனங்களை, நெரிசல் காரணமாக, 40 கி.மீ., வேகத்தில் இயக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஏற்பட்டு வருகிறது.

பரனுார் சுங்கச்சாவடி முதல் ஆத்துார் சுங்கச்சாவடி வரை, 50 கி,மீ., துாரம் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக விபத்துகள் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள உத்திரமேரூர், படாளம், மதுராந்தகம், திண்டிவனம் சந்திப்புகளில், சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க திட்ட வரையறை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சாலையில், புறநகர் பகுதியில் மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய, ஏழு இடங்களில், மின்துாக்கி வசதியுடன் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் திட்டம், ஆரம்ப நிலையில் உள்ளது.

இரும்புலியூர் – வண்டலுார் வரை 2.30 கி.மீ., துாரம், 20.77 கோடி ரூபாயிலும், வண்டலுார் — கூடுவாஞ்சேரி வரை 5.30 கி.மீ., துாரம், 44.48 கோடி ரூபாயில், எட்டு வழிச்சாலையா விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

அதேபோல், கூடுவாஞ்சேரி — செட்டிபுண்ணியம் மகேந்திரா சிட்டி வரை, 13.30 கி.மீ., துாரம், 209.32 கோடி ரூபாயில், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம், 20.9 கி.மீ., துாரத்திற்கு, 274.57 கோடி ரூபாயில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு, பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சுங்கச்சாவடி, 2019ம் ஆண்டே காலாவதியாகி விட்டதாக, கடந்தாண்டு ஆகஸ்டில், சி.ஏ.ஜி., வெளியிட்ட அறிக்கை வாயிலாக தகவல்கள் வெளியானது. தற்போது, வெறும் 57.6 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவல், வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுங்கச்சாவடியை இழுத்து மூடக்கோரி, மக்கள் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், மேலும் பல ஆண்டுகள் சுங்கச்சாவடியை செயல்படுத்தி, கட்டண வசூல் நடத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிடுவது, இந்த பதிலால் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

சந்தேகம்

கடந்த ஆண்டு வெளியான சி.ஏ.ஜி., அறிக்கையை அடிப்படையாக கொண்டு, சுங்கச்சாவடியை அகற்ற பரனுாரில் போராட்டம் நடத்தி புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மூலதன செலவு கிடைக்கவில்லை என, ஆர்.டி.ஐ., வாயிலாக கிடைத்துள்ள தகவலால், வாகன ஓட்டிகளிடம் பல ஆண்டுகளுக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடுவது தெரிகிறது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

– கணேஷ்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *