சென்னை ஐஐடி புது முயற்சி : ஹைப்பர் லூப் வழித்தடம் மணிக்கு 1000 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்
சென்னை: ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் என்பது வெற்றிடமான ஒரு குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் மின்னல் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் இருக்கும். இதில் அமர்ந்து பயணிகள் பயணிப்பார்கள். காந்த அலைகள் மூலம் இந்த ரயில் பயணிக்கும். ஒரே நேரத்தில் 40 பேர் இதில் பயணம் செய்யலாம். இந்த அதிவேக ஹைப்பர் லூப் தொழில்நுட்ப ரயில் திட்டத்தை, சென்னை விமான நிலையத்தில் இருந்து, பரந்தூர் விமான நிலையம் இடையே சாத்தியப்படுத்துவது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
குறைந்த அழுத்தக் குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியைப் பயன்படுத்தி விமானம் போன்ற வேகத்தில் ரயில்களை இயக்கும் தொழில்நுட்பம் கொண்ட இந்த ஹைப்பர் லூப் ரயில் சேவைக்கு டிராக் எதுவும் தேவைப்படாது. இந்த ஹைப்பர் லூப் டெக்னாலஜியை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 1000 கி.மீ., வரை பயணம் செய்யலாம். இந்நிலையில் இதற்கான பிரத்யேக வழித்தடமும் சென்னை ஐஐடி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வழித்தடமானது 410 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் லூப் போக்குவரத்து என்பது வித்தியாசமான போக்குவரத்தாகும். பொதுவாக மக்கள் காரில் பயணம் செய்யும் போது மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் அதிகபட்சமாக செல்ல முடியும். அதுவே ரயிலில் பயணம் செய்யும் போது மணிக்கு 500 கி.மீ., வேகத்தில் செல்லலாம். அதுவே விமானத்தில் பயணம் செய்யும் போது அதிகபட்சமாக 700 முதல் 800 கி.மீ., வேகத்தில் செல்லலாம்.
ஆனால் இந்த வேகத்தை எல்லாம் மிஞ்சும் வகையில் ஹைப்பர் லூப்பில் 1000 கி.மீ., வேகத்தில் பயணம் செய்ய முடியும். 1000 கி.மீ., வேகம் என்பது எந்த ஒரு வாகனத்திலும் சாத்தியமில்லை ஆனால் ஹைப்பர்லூப்பை பயன்படுத்தினால் அது நிச்சயம் சாத்தியம் தான். ஹைப்பர்லூப்பை பொறுத்தவரை ஒரு இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு கடினமான விஷயம் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
அதுவே ஹைப்பர் லூப்பை நிறுத்துவதற்கு கொஞ்சம் இடம் தேவைப்படும். உடனடியாக நிறுத்தினால் அது ஆபத்தாகும். அதுவே கொஞ்சம் முன்னதாக நிறுத்தினால் எந்த ஒரு அதிர்வும் மக்களுக்கு வராது என்று ஐஐடி மாணவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் மும்பை புனே இடையே ஏற்கனவே ஹைப்பர்லூப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல் பஞ்சாபிலும் அமிர்தரஸ்சில் இருந்து சண்டிகர் இடையே வரும் என கூறப்படுகிறது. இந்தியா தற்போது வளர்ந்து வரும் நாடாக இருந்து வருகிறது.
ஹைப்பர்லூப் அமைக்க ஆயிரம் கோடிகள் செலவாகும். இதற்காக அரசு அனுமதி பெற வேண்டும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் என ஏராளமாக இருப்பதால் கொஞ்சல் சிக்கலான விஷயம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘ஒரு ஹைப்பர் லூப்பில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்பது அந்த ஹைப்பர் லூப்பின் பாட்கள் அதாவது பெட்டிகள் என அதனை அழைப்பர். அதனை பொறுத்து தான் பயணம் செய்ய முடியும். ஒரு ஹைப்பர் லூப்பில் 40 பேர் வரை பயணம் செய்யலாம்.
அதிகபட்சமாக ஹைப்பர்லூப்பில் 100 பேர் வரை பயணம் செய்யலாம்,’’ என்றனர். இந்த ஹைப்பர்லூப் சோதனை செங்கல்பட்டு மாவட்டத்தில் முழுமை அடைந்துள்ளதால் சென்னை மக்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். அவ்வாறு தமிழகத்தில் ஹைப்பர்லூப் வழித்தடம் அமைக்கப்பட்டால் தமிழகத்தின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட நிமிடங்களில் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.