44 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடு திரும்பினர்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 13வது வார்டு மற்றும் பல்லாவரம் கண்டோன்மென்ட் 6வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வயிற்றுப்போக்கு பாதிப்பால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் வெளி நோயாளிகளாக தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டு பகுதியில் இருந்து 27 பேரும், பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து 22 பேரும் என மொத்தம் 49 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில் இருந்து 26 பேரும், பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து 22 பேரும் என மொத்தம் 48 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று முன்தினம் 25 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றனர். நேற்று 19 பேர் சிகிச்சை முடித்து வீட்டிற்கு சென்றனர். தற்போது மருத்துவமனையில் 4 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.
தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் 13வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி வருவதோடு, மாநகராட்சி பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதி முழுவதும் குடிநீர் பகிர்மான குழாய்கள் குளோரின் பவுடர் போட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன