அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சு – திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த பொய் செய்திகளை பரப்புகின்றனர்
தாம்பரம்: திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புகின்றனர், என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியுள்ளார். பல்லாவரம் வடக்கு பகுதி திமுக மற்றும் இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜமீன் பல்லாவரம் பகுதியில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை விளையாடி துவக்கி வைத்தனர்.
இதில் பகுதிச் செயலாளர்கள் திருநீர்மலை ஜெயக்குமார், பெர்னாட், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோல்டு பிரகாஷ், துணை அமைப்பாளர் ஜானகிராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், விளையாட்டுப் போட்டியில் எப்படி வேகமாக இருக்கிறோமோ அதே போல கட்சியிலும் வேகமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். எதிரிகள் எல்லாம் மூட்டை பூச்சிகளைப் போல் அதிகமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தலைவர் ஆணையிட்டு இருக்கிறார். எனவே கட்சியினர் தீவிரமாக வேலை செய்ய வேண்டும். இன்றைய திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தவறான தகவல்கள், பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர், எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலைவருக்கு பிறகு இந்த இயக்கத்தை 50 ஆண்டுகாலம் கட்டி காக்கக்கூடிய ஒரு இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலின் கிடைத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.