மொட்டை மாடியில் மழைநீர் தேக்க நடவடிக்கை: வெள்ள பாதிப்புகளை தடுக்க வினோத திட்டம்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், என்ன செய்வதென்று தெரியாமல், பெரிய கட்டடங்களின் மொட்டை மாடியில், 10 செ.மீ., அளவுக்கு மழைநீர் தேக்கி வைப்பதற்கான வினோத திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ., பரப்பளவு உடைய, பெருநகர மாநகராட்சியாக உள்ளது. இங்கு, 387.39 கி.மீ., பேருந்து தட சாலையும், 5,524.61 கி.மீ., நீளத்தில் உட்புற சாலைகளும் உள்ளன. ஒரு கோடி மக்கள் தொகையை நெருங்கியுள்ள சென்னை மாநகராட்சியில், 3,048 கி.மீ., நீளத்துக்கு தற்போது மழைநீர் வடிகால் உள்ளது.

இவற்றில் பெரும்பாலும், 5 செ.மீ., அளவு பெய்யும் மழைநீர் உள்வாங்கும் நிலையிலேயே உள்ளது. அதேநேரம், தொடர்ந்து கனமழை பெய்தால், சாலையில் மழைநீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளையும் பாதித்து வருகிறது.

மீதமுள்ள, 2,476 கி.மீ., நீள உட்புற சாலைகளிலும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், அதை செயல்படுத்துவதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சென்னை முழுதும் மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்த குறைந்தது, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என, மாநகராட்சி கருதுகிறது.

இந்நிலையில், மழைநீர் தேங்குவதற்கான காரணங்களை மாநகராட்சி ஆய்வு செய்ததில், பெரிய, பிரமாண்டமான கட்டடங்களில் பெய்யும் மழைநீர், உடனடியாக சாலையில் வெளியேற்றப்படுவது முக்கிய காரணமாக கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால், பெரிய கட்டடங்களில் பெய்யும் மழைநீரை, சில மணி நேரம் கட்டடம் மற்றும் அதன் வளாகத்திலேயே தேக்கி வைப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த, கட்டுமான நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. அத்துடன், அவற்றை திட்டமாகவும் செயல்படுத்தவதற்கு, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் சில இடங்களில், 4 முதல் 10 செ.மீ., அளவு

மழை தொடர்ந்து பெய்யும்போது, 1,000 சதுரஅடி பரப்பளவு கொண்ட கட்டடங்கள், அதன் வளாகங்களில் பெய்யும் மழைநீரும் உடனடியாக சாலையில் வெளியேறுகிறது. இதனால், கால்வாய் கொள்ளவை தாண்டி மழைநீர் தேங்குவதால், வடிவதற்கும், நீர்நிலைகளுக்கு சென்றடைவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தான், மழை பெய்த நேரங்களில் பெரும்பாலான சாலைகளில், முட்டி அளவுக்கு மழைநீர் தேங்குகிறது.

இவற்றை தடுக்க, அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், நிதி பற்றாக்குறையால் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

அதேநேரம், பெரிய கட்டடங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேங்கும் மழைநீரை, மழை பெய்யும்போதே சாலையில் வெளியேற்ற தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மாறாக, மொட்டை மாடியில் 10 செ.மீ., அளவு மழைநீரை தேக்கி வைத்து, வளாகத்திலேயே உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் நிரப்ப வேண்டும். அவை நிரம்பினாலும், மழை நின்ற பிறகே சாலையில் வெளியேற்றலாம். இதனால், சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்த பின், இந்த நீரும் விரைந்து வடிய வாய்ப்பு ஏற்படும்.

இத்திட்டம் சாதாரண குடியிருப்புகளில் செயல்படுத்தப்படாது. அதேநேரம், பெரிய, பெரிய கட்டடங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

மொட்டை மாடியில் மழைநீர் தேக்குவதால், கட்டடத்தின் தன்மை பாதிப்படையாது. ஏனென்றால் பல அடுக்குமாடி கட்டடங்களில் மேல் தளங்களில் தான், நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நீரை தேக்குவதற்கான கட்டமைப்புகள் இருக்கும் போது, மழைநீரை தேக்குவதற்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த முடியும்.

இது குறித்து, கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தால், முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *