ஓ.எம். ஆரில் உள்வாங்கிய பள்ளங்கள் சீரமைப்பு
சென்னை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையில், டைடல் பார்க் முதல் சிறுசேரி வரை 20 கி.மீ., துாரம், மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக, ஆறு வழிச்சாலை நான்கு வழியாக மாற்றப்பட்டது.
சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பணிகள் முடியும் வரை, சாலை பராமரிப்பு பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், சாலை பராமரிப்பில் மெட்ரோ ரயில் ஒப்பந்த நிறுவனங்கள் மெத்தனமாக செயல்படுவதாக, போக்குவரத்து போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பல இடங்களில் ‘அணுகு’ சாலை உள்வாங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். காயம் அடைந்தவர்களே, தங்கள் சொந்த காசில் சிகிச்சை பெற்று செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையால், 40க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை சேதமடைந்தது. இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, ‘எல் அண்ட் டி’ நிறுவனம் சார்பில், துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் பகுதியில் அணுகு சாலை சீரமைக்கப்பட்டது.
இதனால், இந்த பகுதி வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். ஆவின் முதல் சிறுசேரி வரை உள்ள அபாய பள்ளங்களை சீரமைக்க, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தை, மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.