மாங்காடு இடிந்து விழும் நிலையில் கிளை நுாலகம்

குன்றத்துார்,

சென்னை, மாங்காடு நகராட்சியில், 60,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, குன்றத்துார்- – பூந்தமல்லி சாலையில், மாங்காடு பேருந்து நிறுத்தம் அருகே, 40 ஆண்டுகள் பழமையான சிமென்ட் ஓடுகள் உள்ள கட்டடத்தில் கிளை நுாலகம் இயங்குகிறது. தினமும் 200க்கும் மேற்பட்டோர் நாளிதழ் மற்றும் புத்தகங்களை படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கட்டடத்தின் சுவர்கள் விரிசலடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், வாசகர்கள் பீதியுடன் நுாலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கூரையில் ஓடுகள் சேதமாகி மழைநீர் உள்ளே கசிவதால், புத்தகங்கள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே, இந்த கட்டடத்தை இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, மாங்காடு நகராட்சி தலைவர் சுமதி முருகனிடம் கேட்டபோது, “மாங்காடு கிளை நுாலகம் தற்காலிகமாக இயங்க, 16வது வார்டு சிவானந்தா பூங்காவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

”சேதமான நுாலக கட்டடத்தை சில நாட்களில் இடித்து அகற்றி, அதே இடத்தில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் அமைக்க உள்ளோம்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *