15 ஆண்டுக்கு பின் பூங்காக்கள் ஓ. எம். ஆரில் ரூ .3.50 கோடியில்
சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆரில் குடியிருப்புகள், ஐ.டி., நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இங்குள்ள பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கிய காலி இடங்கள், 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தன.
இதில், விளையாட்டு திடலுடன் கூடிய பூங்கா அமைக்க, பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, செக்கரட்ரியேட் காலனி, ஆழிகண்டீஸ்வரர் நகர் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, எழில் நகரில் மூன்று இடங்கள் என, ஐந்து இடங்களில் சிறுவர் விளையாட்டு திடலுடன் பூங்கா அமைக்கப்படுகிறது.
மொத்தம், 1.62 லட்சம் சதுர அடி பரப்பில், 3.49 கோடி ரூபாய் செலவில், பூங்கா அமைக்கப்படுகிறது. கபடி, டென்னிஸ், நடைபயிற்சி பாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைகிறது.
எழில் நகரில் உள்ள பூங்காக்கள், மழை நின்றதும் திறக்கப்பட உள்ளன. மீதமுள்ள இரண்டு பூங்காக்களில், பணி விரைவில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.