வாகன ஓட்டிகள் கீழ்ப்பாக்கம் கல்லறை சாலையில் திக்… திக் பயணம்
கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் மண்டலம் ஷெனாய் நகர் அருகில், கீழ்ப்பாக்கம் பகுதியில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இதன் அருகே கல்லறை சாலை உள்ளது.
இச்சாலை, பல் துறையினரின் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, படுமோசமாக காட்சியளிக்கிறது.
சமீபத்தில், குடிநீர் வாரியத்தால் ராட்சத குழாய் அமைக்கும் பணிக்காக, சாலையில் பள்ளம் தோண்டி குழாய் அமைக்கப்பட்டது. பின், முறையாக சாலை சீரமைக்கப்படவில்லை.
தொடர் மழை காரணமாக கல்லறை சாலை முழுதும் சேறும் சகதியுமாக மாறி, பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி, கல்லறைக்கு உடல்களை புதைக்க வருவோரும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் அவ்வழியாக இருசக்கர வாகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், மழைநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக, கல்லறை சாலை போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் தான் உள்ளது. தெருவில், பம்பிங் ஸ்டேஷன் இருப்பதால் அடிக்கடி பள்ளம் தோண்டி, சேதமடைகிறது.
‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, அரைகுறை பணிகளை சீரமைத்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.