சிறுமி கர்ப்பம் இளைஞருக்கு ‘போக்சோ’
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர், கடந்த 2019ல் இறந்து விட்டார். 15 வயதான இவரது மூத்த மகள், ஜவுளிக்கடை ஒன்றில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தார்.
இவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட, மருத்துவ பரிசோதனையில் ஒன்றரை மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து செம்பியம் மகளிர் போலீசார் விசாரித்தனர்.
இதில், துணிக்கடையில் வேலை செய்யும் கொளத்துாரைச் சேர்ந்த சந்தோஷ், 20, என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் காதலாக மாறி இருவரும், கடந்த அக்., 21ம் தேதி கோவிலில் தாலி கட்டி அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியிடம் உரிமை எடுத்து பழகிய சந்தோஷ், அவரை கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. விசாரித்த போலீசார், சந்தோஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.