புறக்காவல் நிலையங்களை பராமரிப்பது யார்? குழப்பம்! மாறி மாறி கைகாட்டும் போலீஸ், மாநகராட்சி!

பராமரிப்பின்றி கிடக்கும், ‘போலீஸ் பூத்’ என்ற புறக்காவல் நிலையங்கள், யாருடைய பொறுப்பில் உள்ளது என்பது பற்றி, சென்னை மாநகர போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கேட்கப்பட்ட ஆறு கேள்விகளுக்கு, போலீசார் அளித்துள்ள பதில்கள் வினோதமாகவும் உள்ளது.

பொது மக்களுக்கு நண்பன் என்பதை உறுதி செய்யும் நோக்கில், சென்னை மாநகரம் முழுதும் மினி காவல் நிலையங்கள் போல, ‘போலீஸ் பூத்’ என்ற புறக்காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

அவற்றில், சில புறக்காவல் நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலானவை பராமரிப்பின்றி கிடக்கின்றன. சில புறக்காவல் மையங்கள் மதுக்கூடங்களாகவும், ஆடு, மாடுகள் தஞ்சம் புகும் இடங்களாகவும் கூட மாறியுள்ளன.

நடவடிக்கை

இத்தகைய நிலைக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, சென்னை கொளத்துாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி. வேணுகோபால் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆறு கேள்விகள் எழுப்பியிருந்தார்.

ஆனால், போலீஸ் கமிஷனர் அலுவலகம், அதை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்கும் வகையில் திருப்பி விட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சி.வேணுகோபால் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக கோரும் தகவல்கள், சென்னை மாநகராட்சி அலுவலகம் தொடர்புடையது என்பதால், அச்சட்டம் வாயிலாக தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அசல் மனுவும் அனுப்பி வைக்கப்படுகிறது’ என, கூறப்பட்டு உள்ளது.

இக்கடிதம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழப்பம்

அவர்கள், நிலம் மற்றும் உடைமைத்துறை தனி வட்டாட்சியர் வாயிலாக, சென்னை மாநகர போலீசாருக்கு பதில் கடிதம் எழுதி உள்ளனர்.

அதில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக மனுதாரர் கோரியுள்ள தகவல்கள் யாவும், போலீஸ் துறை சம்பந்தப்பட்டவை என்பதால், நீங்கள் அனுப்பிய கடிதம் அப்படியே திருப்பி அனுப்பப்படுகிறது’ என, கூறப்பட்டுள்ளது.

இதனால், புறக்காவல் நிலையங்களுக்கு யார் பொறுப்பு என்பதில், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், சென்னை மாநகர போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தப்பட்டுஉள்ளது.

காவல் உதவி மையம்

புறக்காவல் நிலையங்கள் குறித்து தெளிவான பதில் ஏதும் கிடைக்காததால், மனுதாரர் வேணுகோபால், மீண்டும் சென்னை மாநகர போலீசாருக்கு ஆறு கேள்விகளுடன் மனு அளித்துள்ளார்.

இதற்கு, சென்னை மாநகர போலீசில் உள்ள, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் என, 12 காவல் மாவட்ட துணை கமிஷனர்களும் தனித்தனியாக பதில் அனுப்பி வருகின்றனர்.

அவர்கள் அனுப்பியுள்ள பதில் ஒவ்வொன்றிலும், மனுதாரர் எழுப்பி உள்ள ஒரே கேள்விகளுக்கு, வெவ்வேறு மாதிரியான பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் அதிகம் கூடும் இடங்களில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை நேராதவாறும், குற்றங்களை தடுக்க வேண்டியும் காவல் உதவி மையம் அமைக்கப்படுகிறது என, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

ஆனால், அண்ணா நகர் காவல் மாவட்ட துணை கமிஷனர் அனுப்பியுள்ள பதிலில், ‘காவல் உதவி மையம் அமைப்பது, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் தொடர்புடையது’ என, கூறப்பட்டுள்ளது.

முறையாக பராமரிப்பு

சென்னையில் முதன் முதலாக காவல் உதவி மையம் அமைக்கப்பட்ட ஆண்டு, பெறப்பட்ட பயன்கள் பற்றிய கேள்விக்கு, ‘காவல் உதவி மையம் அமைப்பது, தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் தொடர்புடையது’ என, பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

இப்படி, ஒரே மாதிரியான கேள்விகளுக்கு, வெவ்வேறு பதில்கள், மனுதாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேட்ட போது, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மற்றும் புறநகரில் உள்ள புறக்காவல் நிலையங்களின் பராமரிப்பு அனைத்தும், போலீஸ் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஒரு சில இடங்களில், மாநகராட்சி இடத்தில், சமூக பொறுப்பு நிதியிலோ, நன்கொடை பெற்றோ கட்டப்பட்டு இருக்கலாம்.

அதுபோன்ற புறக்காவல் நிலையங்களின் பராமரிப்பு மாநகராட்சி வசம் இருக்கலாம். பராமரிப்பு தேவைப்படும் புறக்காவல் நிலையங்கள் குறித்த விபரங்களை, காவல் துறை கொடுத்தால், முறையாக பராமரிக்கவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக விரோதிகள் கூடாரமா?

புறக்காவல் உதவி மையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். மக்கள் புகார் அளிக்க நோட்டு புத்தகம் ஒன்று பராமரிக்க வேண்டும். இங்கு பணியாற்றும் தலைமைக் காவலர், காவல்நிலைய பொறுப்பு அலுவலரின் தலையிடுதல் இல்லாமலே நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், பெரும்பாலான புறக்காவல்நிலையங்கள் சுகாதாரமற்ற நிலையில், சமூக விரோதிகளின் கூடாரமாகவும், அடிப்படை வசதியற்றும் உள்ளது.

 சி.வேணுகோபால், சமூக ஆர்வலர், சென்னை.

 

கேள்விகளும், வினோத பதில்களும்

போலீஸ் பூத் குறித்த மனுதாரரின் கேள்விகளும், அதற்கு, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை கமிஷனர் அனுப்பியுள்ள பதில்களும் வருமாறு: ஒரு பகுதியில் காவல் உதவி மையம் எனப்படும் போலீஸ் பூத் அமைக்கும் முன், கடைப்பிடிக்கும் அரசு சட்டம் மற்றும் விதிமுறைகள் பற்றிய தகவல்கள் என்ன? காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் காவல் உதவி மையம், பொது மக்களின் தேவைக்காகவும், பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்படுவதால், அதற்கென தனிச்சட்டம் ஏதும் இல்லை.ஒரு போலீஸ் பூத்தில் இருக்க வேண்டிய பதிவேடுகள், காவல் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் திறந்திருக்க வேண்டிய நேரம் பற்றிய தகவல் என்ன? காவல் உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும். அங்கு, பொது நாட்குறிப்பு பராமரிக்கப்படும். சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்படுவர். அவ்வாறு, 24 மணி நேரமும் இயங்காத காவல்உதவி மையத்தில், செக்டார் எனப்படும் ரோந்து போலீசார் தேவைப்படும் நேரத்தில் அங்கு பணியில் இருப்பர்.காவல் உதவி மையத்தின் பராமரிப்புக்கு பொறுப்பான காவல் நிலைய அதிகாரி யார்?காவல் உதவி மையத்தில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும் காவலர்களால், பராமரிப்பு மேற்கொள்ளப்படும்.ஒரு காவல் உதவி மையம் அமைக்க ஆகும் செலவுகள், காவல் துறை கையாளும் முறைகள் மற்றும் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கேட்கும் முறைகள் என்ன? மனுதாரர் கோரிய தகவல்கள், கீழ்ப்பாக்கம் மாவட்ட காவல் நிலைய ஆவணங்களில் இல்லை.சென்னையில் முதன் முதலாக, காவல் உதவி மையம் அமைத்த ஆண்டு மற்றும் தற்போது வரை காவல் உதவி மையத்தால் பெறப்பட்ட பயன்கள் என்ன?சென்னையில் முதன் முதலாக காவல் உதவி மையம் அமைத்த ஆண்டு தொடர்பாக, கீழ்ப்பாக்கம் மாவட்டத்தில் தகவல் இல்லை.

வளையத்திற்குள் சென்னை

சென்னையில் குற்றச்செயலில் ஈடுபடுவோர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தப்பிச்செல்லாத வகையில், சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், எஸ்.ஐ., உட்பட நான்கு போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இ.சி.ஆர்., அக்கரை, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், மவுன்ட் பூந்தமல்லி சாலையில் இந்தியா ஷூ கம்பெனி அருகிலும், போரூர் சுங்கச்சாவடி, வானகரம், மாதவரம் மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி, எம்.ஆர்.எப்., எண்ணுார் விரைவுச் சாலை, செங்குன்றம் காவாங்கரை சந்திப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எம்.ஆர்.எப்., சந்திப்பு, ஜி.எஸ்.டி.,சாலையில் சர்வதேச விமான நிலையம், வேளச்சேரி கைவேலி ஜங்ஷனில் உள்ள சாவடிகள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இந்த சாவடிகளில், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. காவல் துறையின் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் யாரேனும், அந்த சோதனைச்சாவடிகள் வழியாக சென்றால், கண்காணிப்பு கேமரா படம் பிடித்து, மேல் அதிகாரிகளுக்கு தானியங்கி வாயிலாக அனுப்பும் வசதியும் செய்யப்பட உள்ளது. மேலும், வாகனங்களின் பதிவு எண்களும் கேமராவில் பதிவாவதால்,திருட்டு வாகனமாக இருந்தால் அதையும் கண்டுபிடித்து போலீசாருக்கு சுட்டிக்காட்டி விடும். இந்த நடவடிக்கையால், வெளியூர், வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகள் தப்பிச் செல்வது தடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *