நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் நாசமாகும் நீர்நிலைகள் ‘ஈஞ்சம்பாக்கத்தில் குளங்களை ஆக்கிரமித்து கட்டுமானம் அத்துமீறல்!
இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில், 194வது வார்டில், இ.சி.ஆரை விரிவாக்கம் செய்தபோது, அதை ஒட்டி உள்ள குளத்தை மீட்காமல் விட்டதால், குளத்தை மூடி வணிக நிறுவனங்கள் கட்டப்படுகின்றன. நீதிமன்றம் உத்தரவிட்டும், குளங்களை மீட்டெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, நீர்நிலை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சி எல்லையில், பெரிய எண்ணிக்கையில் குளம், ஏரிகள் இல்லை. ஆனால், விரிவாக்கத்தில் உள்ள ஒவ்வொரு மண்டலங்களிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. சென்னை அபார வளர்ச்சி அடைந்ததால், தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏரி, கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக வழங்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் தேவையில், 70 சதவீதத்தை கடல்நீரில் இருந்து சுத்திகரித்து பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது.
நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், மாயமான நீர்நிலைகளை மீட்டெடுப்பதில், அரசு துறைகள் அலட்சியமாக உள்ளன.
விரிவாக்க மண்டலங்களில் ஒவ்வொரு வார்டிலும், 15 முதல் 30 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை மீட்டெடுத்தாலே போதும்; நிலத்தடி நீரை சேமிப்பதோடு, குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில், 27 குளங்கள் உள்ளன. இதில், 9 குளங்கள் மாநகராட்சி வசம் உள்ளன.
மூன்று குளங்கள், தனியார் சுற்றுச்சுவர், கட்டடங்கள், வீடு, கடைகள் என, பாதி ஆக்கிரமிப்பில் உள்ளன. மீதமுள்ள, 15 குளங்கள் இருந்த அடையாளம் தெரியாமல் போய்விட்டன.
குளங்களை மீட்டெடுக்க, 2019ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, எட்டு துறைகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு, ‘மாயமான குளங்களை வருவாய் துறை மீட்டெடுத்து, மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்.
பாதி ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை, வருவாய்த்துறை உதவியுடன் மாநகராட்சி மீட்டெடுக்க வேண்டும்.
மாநகராட்சி வசம் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றி, வருவாய் ஆவண அளவு அடிப்படையில், நீர் நிலைகளையும் சுற்றி தடுப்பு அமைத்து பாதுகாக்க வேண்டும்’ என, முடிவு செய்தது. இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, ஐந்து ஆண்டுகள் கடந்தும், மாயமான குளங்களை மீட்டெடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை என்ற இ.சி.ஆர்., ஆறுவழி சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பட்டா நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அதை ஒட்டி உள்ள நீர்நிலைகளை விட்டுவிட்டனர். இதனால், அதில் புதிதாக வணிக நிறுவனங்கள் கட்டப்படுகின்றன.
அதன்படி, ஓ.எம்.ஆரை ஒட்டி சர்வே எண்: 87/1, 2ல் தீர்த்தன்கேணி குளம் மற்றும் சர்வே எண்: 202ல் ராவுத்தர்கேணி குளம் உள்ளது.
இவை 7 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த குளங்களை, சாலை விரிவாக்கத்தின்போது மீட்டெக்கும்படி, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், சாலைக்கு தேவையானதை எடுத்துவிட்டு, குளத்தை அப்படியே விட்டுவிட்டனர். அதில், ஆக்கிரமிப்பாளர்கள், மண், கட்டட கழிவுகள் கொட்டி மூடிவிட்டு, வணிக கட்டடங்கள் கட்டி வருகின்றனர்.
இதனால், நீர்நிலைகள் இருந்த அடையாளமே தெரியாமல் போய்விடுகிறது என, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
— நமது நிருபர் —