கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு கூடுதல் பணியிடங்கள் தேவையா?
சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிச., 30ல் இப்போருந்து நிலையம் திறக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகளை சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவு அதிகாரிகளே நேரடியாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு, கடைகள் ஒதுக்குவது, வாகன நிறுத்தம், விளம்பர நிர்வாகம் ஆகிய பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பேருந்து நிலைய நிர்வாகத்துக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் ஒரு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். வருவாய் துறையில் இருந்து அயல்பணி அடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு உதவியாக, ஒன்பது புதிய பணியிடங்களை ஏற்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கு அனுமதி கோரி, சி.எம்.டி.ஏ., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையிடம் கோரியுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அனுப்பியுள்ள கடிதம்:
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நிர்வாக பணிக்காக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் விபரத்தை அளிக்கவும். கோயம்பேடில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் மாதவரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு மாற்றப்பட்ட பின், இங்கு ஏற்கனவே இருந்த பணியிடங்களை கிளாம்பாக்கத்துக்கு ஏன் மாற்ற கூடாது?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் விபரம் என்ன? அந்த வருவாயை வைத்து, புதிய நிர்வாக பணியிடங்களுக்கான செலவை சமாளிக்க முடியுமா என அதில் கேட்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதிய பணியிடங்களை ஏற்படுத்துவது குறித்து குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.