மாணவியிடம் போன் பறிப்பு சீருடையால் சிறுவன் சிக்கினான் ‘
சென்னை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஆனி சோபியா, 19; தனியார் கல்லுாரி மாணவி. இவர், நேற்று முன்தினம் இரவு, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் சில்லரை வர்த்தக நிறுவனத்திற்கு சென்றார்.
பின், வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டபோது, கையில் வைத்திருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை, மர்மநபர் பறித்துச் சென்றார்.
இதுகுறித்து, வேப்பேரி போலீசார் விசாரித்தனர். இதில், வர்த்தக நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த நபர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் அங்கு பணிபுரியும் 17 வயது சிறுவன் என்பது உறுதியானது. இதையடுத்து, சிறுவனை நேற்று கைது செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
அதேநேரம், பிரபல வர்த்தக நிறுவனத்தில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதை அறிந்தும், போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.