உதயநிதி வருகைக்காக காத்திருப்பு : முட்டுக்காடு மிதவை உணவகம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக படகு இல்லம் உள்ளது.

இதில், மிதவை படகுகள், இயந்திர படகுகள் மற்றும் அதிவேக இயந்திர படகுகளில் சுற்றுலா பயணியர் சாகசம் செய்யும் வசதி உள்ளது.

மேலும், சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகமும், கொச்சியைச் சேர்ந்த, ‘கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல்’ எனும் தனியார் நிறுவனமும் இணைந்து, மிதவை உணவக கப்பலை தயார் செய்துள்ளன.

மொத்தம் ஐந்து கோடி ரூபாய் செலவில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில், இரண்டு அடுக்குகளுடன் கூடிய இந்த மிதவை உணவகம், 60 குதிரை திறனுடைய இயந்திரத்தின் வாயிலாக இயக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகள் முடிந்து, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணியர் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்ணும் வகையிலும், இயற்கையை ரசிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தின் முதல் இரண்டடுக்கு மிதவைப்படகு, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், நவீன வசதிகளுடன் தயாராக உள்ளது.

இதில், தனி நபர்கள் அமர்ந்து, முட்டுக்காடு ஏரியின் அழகை, 5 கி.மீ., சுற்றளவில் சென்று ரசிக்கும் வகையிலும், பெருநிறுவனங்களின் கூட்டங்கள், பிறந்தநாள், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சிறு நிகழ்வுகளையும், மொத்த வாடகையில் இயக்கும் திட்டம் உள்ளது.

இதை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்க உள்ளார். தற்போது, மழைக்காலம் என்பதால், அதற்கான நிவாரண பணிகளில் அவர் மும்முரமாக உள்ளதால், அவரின் தேதி கிடைக்கவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இதை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *