ஐ.டி., ஊழியரை தாக்கி மொபைல் பறித்த 3 பேர் கைது
செம்மஞ்சேரி,சோழிங்கநல்லுார், கே.கே.சாலையை சேர்ந்தவர்கள் ஆகாஷ், 25, ஜனகர், 36. ஐ.டி., ஊழியர்கள். நண்பர்களான இருவரும், இரு தினங்களுக்கு முன், சோழிங்கநல்லுார் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்டோவில் வந்த நான்கு பேர், இரண்டு பேரின் கை, காது, தோள்பட்டையில் கத்தியால் வெட்டி, அவர்களிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 5,000 ரூபாய் பறித்தனர். செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்ததில், மாங்காடு பகுதியை சேர்ந்த ஷெரிப், 24, அப்துல் ரசாக், 24, அப்பாஸ், 22, மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது.
நேற்றுமுன்தினம், நான்கு பேரையும் கைது செய்து சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், ஷெரிப், அப்துல் ரசாக், அப்பாஸ் ஆகியோர் தப்பி செல்ல முயன்ற போது, தடுக்கி விழுந்து காயம் அடைந்தனர். சிறுவனை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மற்ற மூன்று பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.