காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தாம்பரம்,
குரோம்பேட்டை அடுத்த சிட்லப்பாக்கத்தில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு, சேலையூர் அனைத்து மகளிர் காவல், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர், ‘சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அதை வெடிக்க வைப்பதற்கான ரிமோட்டை அழுத்தினால், காவல் நிலையம் வெடித்து சிதறும்’ எனக்கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஐந்து பேர் அடங்கிய வெடிகுண்டு நிபுணர்கள், காவல் நிலையத்தில் சோதனை நடத்தியதில் புரளி என்பது தெரிந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், கள்ளக்குறிச்சி அருகே, வேப்பூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், 43, என்பது தெரிந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட அவர், சில ஆண்டுகளுக்கு முன், சிட்லப்பாக்கம் பகுதியில் வசித்தபோது, மனைவியுடன் தகராறு ஏற்படும் போது, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தன் மனைவியை கொலை செய்து விட்டார்கள் எனக்கூறி வந்ததும் தெரியவந்தது. அவரை பிடிக்கும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.