குளமாக காட்சியளிக்கும் மூலக்கொத்தளம் சுடுகாடு
ராயபுரம் சுடுகாட்டில், குளம் போல் மழைநீர் தேங்கி இருப்பதால், இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் உறவினர்கள் திணறினர்.
ராயபுரம், மூலக்கொத்தளத்தில், 24 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான சுடுகாட்டில், இந்த பகுதியை சேர்ந்த மக்களின் உடலை எரிக்கவும், புதைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். சுடுகாட்டின் ஒருபகுதி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் பெய்த ‘பெஞ்சல்’ கனமழையால், மூலக்கொத்தளம் சுடுகாட்டில், 2 அடிக்கு குளம்போல் மழைநீர் தேங்கிஉள்ளது. இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமலும், இறுதி சடங்கு செய்ய முடியாமலும் உறவினர்கள் திணறுகின்றனர்.
மேலும், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கால்பந்து விளையாட்டு மைதானம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் கால்பந்து, கை பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை, இந்த மைதானத்தில் ஆடி வருகின்றனர். தொடர் மழையால், தண்ணீர் போக வழி இன்றி, மழைநீர் 2 அடிக்கு குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது.
விரைந்து சுடுகாட்டில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.