திருவள்ளூரில் கனமழை கொட்டியும் பாதி கூட நிரம்பாத 703 ஏரிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்று நீர்பாசன பராமரிப்பில், 336 ஏரிகள் உள்ளன. தவிர, 100 ஏக்கருக்கும் குறைவாக, 581 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை ஊரக வளர்ச்சித் துறையினர் பராமரிக்கின்றனர்.

தவிர, நகர, கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு பயன்படும் வகையில், சிறிய அளவிலான, குளம், குட்டை என, 3,296 நீர்நிலைகள் உள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், பாதிக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்பியிருந்தன. இதனால், விவசாய பணிகளுக்கு நீர்பற்றாக்குறை இல்லாத நிலை இருந்தது.

நடப்பு ஆண்டு இதுவரை, போதுமான அளவு மழை பெய்யாததால், பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. வடமேற்கு பருவமழை துவங்கி ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும், குறைந்த அளவிலான மழையே பெய்துள்ளது.

இந்த நிலையில் ‘பெஞ்சல்’ புயல் காரணமாக, மூன்று நாட்களாக பலத்த மழை பெய்தது. இருப்பினும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அதிக கனமழை இருந்தது.

திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூண்டி, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில், குறைந்த அளவே மழை பெய்துள்ளது.

விவசாயிகள் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாய தேவைக்காக பயன்படும் ஏரிகளில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது.

ஏரிக்குள் நடக்கும் விவசாய பணிக்காக, தண்ணீர் தேங்காத வகையில் வரத்து கால்வாய் மற்றும் உபரி நீர் வெளியேறும் பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சில ஏரிகளில் மீன் வளர்க்கும் பணிக்காக, ஒப்பந்ததாரர்கள், மீன் வெளியேறாத வகையில், தடுப்பு அமைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றி, வரத்து கால்வாய் துார் வாராததாலேயே ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

இதனால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பாமல் உள்ளன. குறிப்பாக, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 336 ஏரிகளில் 56ம், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள, 156 என, மொத்தம் 214 ஏரிகள் மட்டுமே 100 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது.

குறிப்பாக, வில்லிவாக்கம், எல்லாபுரம், திருவள்ளூர், கடம்பத்துார், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய ஏழு ஒன்றியங்களில், ஒரு ஏரி கூட முழு அளவில் நிரம்பவில்லை. மீதம் உள்ள, 703 ஏரிகளில் 75 – 50 சதவீதத்திற்கும் குறைவான அளவே நீர் நிரம்பி உள்ளது.

இதே போல, சிறிய அளவிலான குளம், குட்டை என, 3,296ல், 540ல் மட்டுமே முழு அளவில் நிரம்பி உள்ளது. 743 நீர்நிலைகள் 75 சதவீதமே நிரம்பி உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே ஏரிகளுக்கும், சிறிய அளவிலான நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கக் கூடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *