1,000 கி.மீ. , புது வடிகால் கட்ட நிதி இல்லை : உலக வங்கி உதவிக்காக சென்னை மாநகராட்சி… காத்திருப்பு!
சென்னை மாநகராட்சியின் மைய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன், 2 செ.மீ., மழையை எதிர்கொள்ளும் அளவில் கட்டப்பட்ட 1,000 கி.மீ., வடிகால்கள் துார்வாரப்படாமலும், அதேநேரம் கழிவுநீர் கலந்தும் உள்ளன. இவற்றை அகற்றி, புதிதாக கால்வாய் கட்ட உலக வங்கியிடம் உதவி கோர, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில், 2015 வெள்ள பாதிப்புக்கு பின், ஒருங்கிணைந்த கூவம் வடிகால் பணிகள், சென்னையின் மைய பகுதிகளில் அமைக்கப்பட்டன. அவை பெரும்பாலும், 5 செ.மீ., மழையை எதிர்கொள்ளும் அளவிற்கு கட்டப்பட்டன.
தொடர்ந்து, ஒவ்வொரு மழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து, ஒருங்கிணைந்த கொசஸ்தலையாறு வடிநிலைப்பகுதி திட்டம், கோவளம் வடிகால் திட்ட பணிகள் அடிப்படையில், மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில், மழைநீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உடல் உபாதை
தற்போது வரை, 3,048 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளது. இவற்றில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் வடிகால்கள், ஒரு மணி நேரத்திற்கு 7 முதல் 10 செ.மீ., மழையை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், நிலப்பரப்பின் தன்மைக்கு ஏற்பவும், வடிநில பகுதிகளுக்கு ஏற்பவும், ஏற்ற – தாழ்வான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருக்கும் பகுதிகளிலும், நீர்தேங்குவதற்கான காரணம் குறித்து, மாநகராட்சி சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
பழைய மாநகராட்சி பகுதிகளாக, சென்னையின் மைய பகுதிகளில், ஆங்கிலேயேர் காலத்திலும், அதற்கு பின் 50 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்பட்ட கால்வாய் தான் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் தண்ணீர் செல்வதில் தடை இருப்பது, ஆய்வில் தெரிந்தது.
தவிர, மழைநீர் மற்றும் கழிவுநீர் என இரண்டும் செல்லும் வகையில் அந்த பழைய கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் தற்போது வண்டல், கழிவுகள் அடைத்துள்ளன.
குறிப்பாக, தேனாம்பேட்டை, ராயபுரம், திரு.வி.நகர் உள்ளிட்ட மண்டலங்களில், இந்நிலையால் தான் ஒவ்வொரு மழைக்கும் கடினமான நிலையை எதிர்கொள்ள நேரிடுகிறது.
அப்பகுதியில் மற்றொரு தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட வடிகால்களில் தான், பெரும்பகுதி நீர் வடிகிறது. மழை நின்றாலும், நீர் வடிய சில மணி நேரம் தேவைப்படுகிறது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கத்தால், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
பழைய கால்வாய்களை அகற்றி, புதுப்பிக்க மாநகராட்சி திட்டமிட்டாலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப கழிவுநீர் செல்ல தனி பாதை, மழைநீர் செல்ல தனி பாதை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு செலவும் அதிகமாகும் என்பதால், 1,000 கி.மீட்டருக்கு புதிய கால்வாய் கட்ட, உலக வங்கியிடம் நிதியுதவி கோர திட்டமிட்டுள்ளது.
10 செ.மீ., மழை
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், ஆங்கிலேயர் காலத்திலும், அதற்கு பின் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 1,000 கி.மீ., வரையிலான மழைநீர் வடிகால்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றன.
அந்த காலத்தில் கழிவுநீரும், மழைநீரும் ஒரே வடிகாலில் தான் சென்றன. ஒரு மணி நேரத்தில் 2 – 3 செ.மீ., மழையை எதிர்கொள்ளும் அளவிற்கு தான், அதன் கட்டமைப்பும் கட்டப்பட்டுள்ளது. தற்போதும் இந்த கால்வாய்கள், இடங்களில் பயன்பாட்டில் உள்ளன.
செங்கல், சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள பழைய கால்வாய்கள், பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை; துார்வாருவதற்கான வாய்ப்பும் இல்லை.
இதனால், வண்டல் மண் படர்ந்து, பல பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய்களில் குறைந்த அளவில் தான் மழைநீர் வடிகிறது.
அவற்றை இடித்து அகற்ற வேண்டுமென்றால், கழிவுநீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.
இந்த பழைய வடிகால்களை இடித்து மணிக்கு 10 செ.மீ., மழையை எதிர்கொள்ளும் வகையில் புதிய வடிகால்களை அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கு போதுமான நிதி வசதி இல்லை. ஏற்கனவே பன்னாட்டு வங்கிகளிடம் பெறப்பட்ட நிதியில் தான், மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வட்டியாக, மாநகராட்சி செலுத்தி வருகிறது.
இந்த பழைய வடிகால்களை இடித்து விட்டு, புதிய வடிகால்கள் கட்டவும், பன்னாட்டு வங்கிகளின் உதவியை மாநகராட்சி கோர உள்ளது. அரசிடம் அனுமதி பெற்று, விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –