கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்றபோது குளத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவன் பலி
பெரம்பூர்: கிரிக்கெட் விளையாடியபோது குளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது தவறி விழுந்த கல்லூரி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியானார். வியாசர்பாடி பெரியார் நகர் திருச்சி சின்னசாமி தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் இருதயராஜ் (50), கார் டிரைவர். இவருக்கு ஆகாஷ் மற்றும் ஜாக் டேனியல் என்ற 2 மகன்கள். இவர்களில் இளைய மகன் ஜாக் டேனியல் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். ஓட்டேரி மங்களபுரம் சேமாத்தம்மன் காலனி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று முன்தினம் ஜாக் டேனியல வந்துள்ளார். மாலை 5 மணி அளவில் அங்குள்ள தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, கிரிக்கெட் பந்து, சேமாத்தம்மன் கோயில் பின்புறம் உள்ள குளத்தில் போய் விழுந்துள்ளது. ஜாக் டேனியல் அந்த பந்தை எடுக்க சென்றுள்ளார்.
அப்போது கால் தவறி குளத்தில் விழுந்துள்ளார். அருகில் இருந்த நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தபோதும் அவர்களால் முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜா சம்பவ இடத்திற்கு வந்து மழைக்கால மீட்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். பிறகு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜாக் டேனியலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது மருத்துவர்கள், ஜாக் டேனியலை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட பாட்டி வீட்டிற்குச் சென்ற கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.