சென்னையில் கனமழை ஓய்ந்ததால் மாநகராட்சி பூங்காக்கள் இன்று முதல் திறப்பு: ஆணையர் குமரகுருபரன் தகவல்
சென்னை: சென்னையில் கனமழை முடிவுற்றதை தொடர்ந்து, மாநகராட்சியின் 871 பூங்காக்களிலும் தீவிர தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டு, இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. கனமழை முடிவுற்றதை தொடர்ந்து, மாநகராட்சியின் 871 பூங்காக்களிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விழுந்த மரங்கள் மற்றும் மரக்கழிவுகள், குப்பை அகற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
மேலும், தீவிர தூய்மை பணியின் கீழ், கனமழையின் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேகரமான மரக்கழிவுகள், குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. கடந்த 1ம் தேதி திருவொற்றியூர் மண்டலம் முதல் சோழிங்கநல்லூர் மண்டலம் வரை 9,002 தூய்மை பணியாளர்கள் மூலமாக 3,942 மெட்ரிக் டன் குப்பை மற்றும் 255.02 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டது. நேற்று மதியம் 2 மணி வரை 3680.03 மெட்ரிக் டன் குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த தீவிரத் தூய்மை பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் 192 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 10,226 பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். மேலும், இந்த மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண் உள்ளிட்ட மழைக்கால நோய்கள் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகளும், நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.