பறிமுதல் கஞ்சா ஒப்படைக்க போலீஸ் தாமதம் செய்ததால் பெண் விடுவிப்பு

சென்னை:பறிமுதல் செய்த கஞ்சாவை, 42 நாட்கள் காலதாமதமாக, நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்ததால், கஞ்சா விற்ற வழக்கில், கைதான பெண்ணை விடுவித்து, மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெனிட்டா, 36. கடந்த 2021 டிச., 24ல், காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே, கஞ்சா விற்றதாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெர்மிஸ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், டி.எஸ்.சீனிவாசன் ஆஜராகி, ”மனுதாரரிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை போலீசார், 42 நாட்கள் தாமதமாக நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். எனவே, மனுதாரர் மீதான குற்றச்சாட்டை, சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது,” என்றார்.

இதையடுத்து, ‘சம்பவ இடத்தில் இருந்து கஞ்சா மீட்கப்பட்டதாக கூறப்படுவது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை.

வழக்கு விசாரணையில் உள்ள பல்வேறு குறைபாடுகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக இருப்பதால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்’ என, நீதிபதி உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *