அய்யப்பன் தாங்கல் ஊராட்சியில் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்

அய்யப்பன்தாங்கல்:அய்யப்பன்தாங்கல் ஊராட்சி அலுவலகத்தில் மழைநீர் சூழ்ந்ததுடன், அதை சுற்றியுள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னைக்கு மிக அருகில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் கொண்ட அந்த ஊராட்சியில், 25,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அங்கு மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி முழுதும் பாதிக்கப்படும்.

அய்யப்பன்தாங்கல் ஊராட்சி, போரூர் ஏரிக்கு மிக அருகில் உள்ளது. தாழ்வான பகுதியும் கூட. மழைக்காலங்களில் மாங்காடு, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், கால்வாய்கள் வாயிலாக போரூர் ஏரிக்குச் செல்லும்.

அந்த கால்வாய்கள் அனைத்தும், அய்யப்பன்தாங்கல் வழியாக சென்றன. இன்று அவை அனைத்தும் மாயமாகி விட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் ‛பெஞ்சல்’ புயல் தாக்கத்தால் பெய்த மழையில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

ஒவ்வொரு மழைக்காலத்தில் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம், குளமாக மாறுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று மழை விட்டும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி அலுவலகத்தில் மழைநீர் தேங்கியது.

ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாய நலக்கூடம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவற்றிலும் மழைநீர் புகுந்தது.

இதையடுத்து நேற்று, மின் மோட்டார் வாயிலாக மழைநீரை அகற்றும் பணியில், ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் ஈடுபட்டனர். ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள வி.ஜி.என்., நகரிலுள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.

இதனால், பகுதி மக்கள் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். மேலும், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்குகிறது.

மின் இணைப்பு பெட்டிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், நேற்று முன்தினம் முதல் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் உள்ள இ.வி.பி., பிரிவு அவென்யூவில் உள்ள ஊராட்சி பூங்கா, இ.வி.பி., பிரிவு அவென்யூ, 3 மற்றும் 4வது பிரதான சாலைகள், சிவராமகிருஷ்ண நகரில் உள்ள பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து போரூர் ஏரிக்கு உபரி நீர் செல்லும் தந்தி கால்வாயில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *