பஸ் நிலையங்களில் உறங்கும் ஆதரவற்றோரால் ஓட்டுனர்கள் பீதி அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க ஊழியர்கள் கோரிக்கை
சென்னை:சென்னையில் முன்பெல்லாம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் பொதுமக்கள் உறங்குவர்.
ஆனால் தற்போது, பல்வேறு பேருந்து நிலையங்களிலும், குறுகிய அளவில் இருக்கும் நடைமேடைகளிலும் அவர்கள் உறங்குவதால், பேருந்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, வடபழனி, பூந்தமல்லி, தி.நகர், பெசன்ட் நகர், தாம்பரம், திருவான்மியூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில், பொதுமக்கள் உறங்குகின்றனர்.
பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில், ஓராண்டுக்கு முன், ஓட்டுனர் பேருந்தை எடுத்தபோது, நடைமேடையில் துாங்கி கொண்டிருந்த நபர், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அதனால் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில், ஓட்டுனர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ‘ஸ்டாப் கரப்ஷன்’ தொழிற்சங்க பேரவை துணை செயலர் லிங்கதுரை கூறியதாவது:
வடபழனி உள்ளிட்டசில பணிமனைகளுடன்செயல்படும் பேருந்து நிலையங்களில், பொதுமக்கள் சிலர் உறங்குகின்றனர்.
ஊழியர்களோ, தனியார் பாதுகாவலர்களோ, விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது என, இவர்களை எச்சரிப்பதில்லை.
இதனால், அதிகாலையில் பேருந்து சேவையை துவங்கும்போது, துாங்கி கொண்டிருப்பவர்கள் பேருந்து சக்கரத்தில் சிக்கிவிடுவரோ என, அச்சமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பன்னாட்டு பொது போக்குவரத்து துறை நிபுணர் அமுதன் கூறியதாவது:
பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பேருந்து நிலையங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போதுமான வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகளை அமைத்து, பேருந்து நிலைய செயல்பாடுகள் தெளிவாக காணக்கூடியவகையிலும், எதிர்மறை செயல்பாடுகளை தடுக்கவும் வேண்டும்.
நிலையங்களில் பயணியர் சறுக்கி விழுதல், தடுக்கி விழுதல் போன்ற விபத்துகளை தவிர்க்க, உள்கட்டமைப்பை சரிசெய்து பராமரிக்கவும், சுத்தமான சூழலை உறுதிப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிசிடிவி’ கேமராக்கள்பொருத்தி, மூன்று ஷிப்ட்களிலும் பாதுகாப்பு ஊழியர்களை நியமித்து, அனுமதியில்லாத நுழைவுகளை தடுக்க வேண்டும்.
இரவு நேரத்தில், பேருந்து நிலைய நடைமேடை மற்றும் பாதைகளில் தங்காமல், துாங்காமல் இருக்க, அவர்களுக்கென தனி இடம் ஒதுக்க வேண்டும்.
பேருந்து நிலையங்களில் துாங்கும், ஆதரவற்றோர் மற்றும் மன நோயாளிகளை அடையாளம் கண்டு, அவர்கள் தங்க மாற்று இடங்களை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.