மாரியம்மன் கோவில் இடிப்பு : நான்கு வழிச்சாலை பணிக்காக.
திண்டிவனம் : திண்டிவனம் – மரக்காணம் நான்கு வழிச்சாலை பணிக்கு தடையாக இருந்த முத்துமாரியம்மன் கோவல் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
திண்டிவனம் – மரக் காணம் வரையிலான இரு வழிச்சாலை, நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 296 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இதில், திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவில் அருகே பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் நான்கு வழிச்சாலை பகுதியில் அமைந்துள்ளதால், கோவிலை அகற்ற முயன்றனர்.
இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கோவிலை அகற்றினால், பச்சைவாழியம்மன் கோவில் பகுதியில் புதியதாக கோவில் கட்டுவதற்காக இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று காலை 7:30 மணியளவில் திண்டிவனம் தாசில்தார் சிவா மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் மூலம் முத்துமாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. மற்றும் பிரம்மதேசம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.