சுங்கத்துறை வேலை என வசூல் மோசடி கும்பலிடம் ஏமாறாதீர்!
சென்னை:சென்னை விமான நிலையம் மற்றும் சுங்கத்துறை கார்கோ பிரிவில் வேலை வாங்கி தருவதாக கூறி, தென் சென்னை பகுதி இளைஞர்களை குறிவைத்து, மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது.
சமீப நாட்களாக சமூக வலைதளங்கள் வாயிலாக, விமான நிலையம் மற்றும் சுங்கத்துறை பிரிவில் வேலைக்கான ஆட்சேர்ப்பு நடப்பதாக, போலியான விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தென்சென்னை பகுதிகளில் உள்ள இளைஞர்களை இந்த கும்பல் குறி வைக்கிறது.
பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், தாம்பரம், வண்டலுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலை தேடுபவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல் அனுப்பப்படுகிறது. பின், நேர்முகத் தேர்வு நடப்பதாக கூறி, அதற்கான தனி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதன் பின், சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு இடத்தில் நேர்முக தேர்வு நடக்கிறது. அதற்கு, லட்சக்கணக்கில் பணம் பெற்று, வேலை கிடைத்ததற்கான ஆணைகளையும், இந்த கும்பல் போலியாக தயாரித்து வழங்குகிறது.
இதை உண்மை என நம்பி பலர், சென்னை விமான நிலையத்திற்கும், மீனம்பாக்கம் சுங்கத்துறை அலுவலகத்திற்கும், கடிதங்களுடன் செல்கின்றனர். அங்கு விசாரித்தபிறகே, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
விமான நிலைய ஆணையம் மற்றும் சுங்கத்துறை சார்பில், வேலைவாய்ப்புக்கு முறையான முன்னறிவிப்பு வெளியிடப்படும். இதுபோன்று, முன்னறிவிப்பின்றி நேரடி ஆர் சேர்ப்பு ஏதும் நடத்தப்படவில்லை. போலியான தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்’ என்றனர்.