விவசாயிகள் வேதனை ‘மணலியில் வெள்ளக்காடான வயல்வெளி
மணலி:சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில், 16, 17 ஆகிய வார்டுகளில் உள்ள, கடப்பாக்கம், கன்னியம்மன் பேட்டை, அரியலுார் மற்றும் அதை ஒட்டிய, விச்சூர், செம்பியம் மணலி போன்ற பகுதிகளில், விவசாயம் நடக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பலவகை விவசாயம் நடந்து வந்துள்ளது. பின் நாளில், நகரமயமாதல் மற்றும் வெள்ளநீரில் கலந்து வரும் ஆயில் கழிவுகளால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நிலங்கள் விற்கப்பட்டு வருகின்றன.
தற்போது எஞ்சியிருக்கும், 150 – 200 ஏக்கர் நிலத்தில், வாழை, நெல் மற்றும் கீரை வகைகள் மட்டுமே பயிரிப்படுகின்றன.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக, பயிர்கள் அனைத்தும் அழுகி வீணாய் போய்விட்டடன.
ஒரு ஏக்கர் நிலத்தில், 1,000 வாழை கன்றுகள் நடவு செய்யப்பட வேண்டும். கன்று ஒன்று, 25 ரூபாய், ஆள் கூலி, நடவு செலவு என ஏக்கர் ஒன்றிற்கு, ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
நல்ல விளைச்சல் இருக்கும் பட்சத்தில், ஏக்கர் ஒன்றிற்கு 4 லட்ச ரூபாய் கூட வருவாய் கிடைக்கும். அதே போல், பாபட்லா நெல் வகை இங்கு அதிகம் பயிரிப்பட்டு வருகின்றன.
குறைந்த மாதத்தில் மகசூல் தரும் நெல்வகைகளை பயிரிட்டால், அவ்வப்போது கொட்டித்தீர்க்கும் மழை, வெள்ளம் மற்றும் ஆயில் கழிவு பிரச்னையால், அறுவடை செய்ய முடியாமல் போய் விடும். அதன் காரணமாகவே, ஆறு மாதம் பயிரான பாபட்லாவை பயிரிடப்படுகின்றன.
மேலும், அரை கீரை, சிறுகீரை, பருப்பு கீரை என, குறைந்த நாளில் மகசூல் தரும் கீரை வகைகளும், மழைநீர் மூழ்கி போயுள்ளன. இதன் காரணமாக, போட்ட முதல் கூட எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த விளைநிலங்களில் தேங்கும் மழைநீர், வெளியேற வழியேதும் கிடையாது. வடிகால்களில் நீர்மட்டம் குறைந்தால் மட்டுமே மெல்ல வடியும். அதுவரை, தேங்கும் நிற்கும் மழைநீரால், பயிர்கள் முழுதும் அழுகி போய் விட்டதாக என, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
மூன்று மாத இடைவெளியில், மூன்று முறை கனமழை பெய்துள்ளது. மணலியின், கடப்பாக்கம், கன்னியம்மன் பேட்டை, அரியலுார் விவசாயிகள் முழுதுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 2015ம் ஆண்டு வெள்ளநீருடன் கலந்து வந்த ஆயில் கழிவுகளால், விவசாய நிலங்களில், மண் தன்மை நாசமாகி விட்டது. எந்த பயிர் விளைவித்தாலும், எதிர்பார்த்த மகசூல் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீரும் வெளியேற வழியில்லை. இதே நிலை நீடித்தால், மணலியின் விவசாயமும் தடம் தெரியாமல் போய்விடும்.- எஸ்.தயாளன், 62, விவசாயி, கடப்பாக்கம், மணலி.