ஆரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை – ஆந்திர மாநிலத்தில் கனமழை காரணமாக பிச்சாட்டூர் அணையிலிருந்து 500 கன அடி நீர் திறப்பு
சென்னை: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆரணியாற்றில் விடப்பட்டது. இதனால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை நிரம்பியது. இந்த ஏரியின் கொள்ளளவு 281 மில்லியன் கன அடியாகும்.
தற்போது 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், நேற்று முன்தினம் 277 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்ததால் நேற்று காலை 10.30 மணிக்கு ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தனர். இந்த ஏரியில் மொத்தம் 4 மதகுகள் உள்ளன. இதில், ஒரு மதகின் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக உயர்த்தப்படும்.
இந்த தண்ணீர் தற்போது நாகலாபுரம், நந்தனம், காரணி வழியாக சுருட்டப்பள்ளி அணையை அடைந்து, ஊத்துக்கோட்டை ஆரணியாற்றிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் திறக்கப்பட்டு ஆரணியாற்றில் தண்ணீர் வருவதால் தமிழக விவசாயிகள் 6,600 ஏக்கரும், ஆந்திர விவசாயிகள் 5,500 ஏக்கரும் பயனடைவார்கள். இந்த தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு கடலில் கலக்கும்.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை, தாராட்சி, பனப்பாக்கம், பேரண்டூர், அரியபாக்கம், புதுப்பாளையம் போன்ற கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தெரிவித்துள்ளார்.
மேலும் பெஞ்சல் புயல் காரணமாக பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 500 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்ட நிலையில் மேலும் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க கூடும். தற்போது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அநாகுப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அரெட்டிபாளையம் தடுப்பணைகள் மூலம் சராசரியாக 3,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே ஆரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
* தரைப்பாலம் உடைந்தது
பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம்-காரணி இடையே ரூ.20 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள 10 கிராம மக்கள் அங்கு தற்காலிக தரைப்பாலம் அமைத்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக மழை பெய்து வந்தது.
இதனால், திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்ததன் காரணமாக பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம்-காரணி கிராமங்களுக்குச் செல்லும் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உடைந்தது. இதனால், ஆற்றில் சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில், போலீசார் இந்த தரைப்பாலத்தில் யாரும் செல்லாதபடி தரைப்பாலத்திற்கு முன் முள் வேலிகளை தடுப்புகளாக அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.
பொதுமக்கள் பாலத்தை கடக்காதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி, புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக வாகனங்களில் 10 கிமீ சுற்றிச் செல்கின்றனர். இதேபோல், மங்களம் கிராமத்திற்குச் செல்ல போடப்பட்ட மண் பாதையும் தண்ணீரில் மூழ்கியது. இதனால், இப்பகுதி மக்கள் ஆற்றை கடக்காதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.