தெற்கு ரயில்வே தகவல் : புயல் கரையை கடந்ததால் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்

சென்னை: பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் சூழ்ந்து, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை சனிக்கிழமை காலை தாமதமாக தொடங்கினாலும் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டன. இதேபோல, சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மார்க்கங்களில் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

இதனிடையே, பல்லாவரத்தில் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், ரயில் சேவை சனிக்கிழமை மதியம் ஒரு மணி நேரம் தாமதமாகின. அதன்பிறகு, கடற்கரை – தாம்பரம் இடையே நேரடி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. தாம்பரத்துக்கு புறப்பட்ட மின்சார ரயில்கள் பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயில் வண்டலூர் வரை மட்டும் இயக்கப்பட்டன.

புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தில் தேங்கிய மழை நீர், பலத்த காற்று காரணமாக, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் பெஞ்சல் புயல் கரையை கடந்ததால், மின்சார ரயில்கள் வழங்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *