16 ஆண்டுகளுக்கு பிறகு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பெரம்பூர்: சென்னை புரசைவாக்கம் பகுதியில் 900 ஆண்டுகள் பழமையான பங்கஜாம்பாள் சமேத கங்காதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடைசியாக 2008ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து தற்போது நேற்று வெகு விமரிசையாக குடமுழுக்கு நடந்தது. முன்னதாக, ரூ.4.82 கோடி மதிப்பில் 36 திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று காலை சிவாச்சாரியார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. மகா கும்பாபிஷேத்தை முன்னிட்டு ஏற்கனவே கடந்த திங்களன்று கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், செவ்வாய்க்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, நேற்று இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
இதை தொடர்ந்து நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பங்கஜாம்பாள் மற்றும் கங்காதீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக செய்யப்பட்டது. கோயில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், பிறகு பஞ்சமூர்த்தி வீதி புறப்பாடும் நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புரசைவாக்கம் பகுதியில் ஏற்கனவே போலீசார் போக்குவரத்து மாற்றத்திற்கு முன்னேற்பாடுகள் செய்திருந்தனர்.
கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ரகுபதி, அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் ஸ்ரீதரன், கூடுதல் ஆணையர் சுகுமார், கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெற்றிகுமார், மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின், வானவில் விஜய், சென்னை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.ரவிச்சந்திரன், வேலு, சுதாகர், செயல் அலுவலர் ராமராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரத்தினம், லீலாவதி, கோபிநாத் மற்றும் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.