காவேரி மருத்துவமனை தகவல் – சிறுநீரகம் அருகில் இருந்த புற்றுக்கட்டி ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்:
சென்னை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 60 வயதான முதியவருக்கு முக்கியமான ரத்தநாளங்கள் மற்றும் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட இடத்திற்கு அருகில் புற்றுக்கட்டி இருந்துள்ளது. அதனை தொடர்ந்து, காவேரி மருத்துவமனை உறுப்புமாற்று சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஆர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர், ரோபோடிக் உதவியுடன் கூடிய அறுவைசிகிச்சை மூலம் புற்றுக்கட்டியை வெற்றிகரமாக அகற்றி உள்ளனர். இதுதொடர்பாக மருத்துவர் ஆர்த்தி கூறியதாவது: சிறுநீரக நோய், நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், தைராய்டு சுரப்பு குறை மற்றும் கரோனரி சிரைக்கான பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டவராக இந்நோயாளி இருந்ததால், அறுவைசிகிச்சை அதிக ஆபத்தானதாக கருதப்பட்டது. எனினும் மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், இந்நோயாளிக்கான சிகிச்சை செய்முறை முழுவதிலும் நிபுணத்துவமிக்க சிகிச்சை பராமரிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்தனர். மிக சமீபத்திய ரோபோடிக் தொழில்நுட்பத்தின் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைசிகிச்சை, பொருத்தப்பட்ட மாற்று சிறுநீரகத்தின் செயல்பாட்டை எவ்விதத்திலும் பாதிக்காமல் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.