2 பேர் கைது -வாடகை தாய் அனுமதிக்கு போலி ஆவணம்

சென்னை,போலி ஆவணங்கள் சமர்பித்து, வாடகை தாயாக அனுமதி கோரிய பெண்ணையும், இடைத்தரகராக செயல்பட்ட பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனரகத்தில், நேற்று முன்தினம் மதியம், மாவட்ட வாடகைத்தாய் மருத்துவக் குழு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழரசி, 25 என்பவர், வாடகைத்தாயாக அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அவரிடம், அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.
சந்தேகத்தில், அவர் சமர்பித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, திருமண பத்திரிகையில், அப்பா, அம்மா பெயருக்கு பதிலாக பெரியப்பா, பெரியம்மா பெயர் இடம் பெற்றிருந்தது. இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு குழந்தைதான் உள்ளது என்று தவறான தகவல் தரப்பட்டிருந்தது. கணவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறியிருந்த அவர், ஏற்கனவே விவகாரத்து பெற்றதும், அதை மறைத்து வாடகை தாயாக முயன்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து, மருத்துவ குழு அதிகாரி இளங்கோவன், தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், தமிழரசியையும், இடைத் தரகராக செயல்பட்ட, திருவொற்றியூரை சேர்ந்த மஞ்சு, 30 என்பவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *